சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே கமலை என்ற கிராமம் உள்ளது. இங்கு பெரியசாமி - விஜயா தம்பதி தனது 17 வயது மகன் நாகராஜுடன் வசித்து வருகின்றனர். தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். மாற்றுத்திறனாளியான நாகராஜ், அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார்.
பின்னர் அதே பகுதியில் உள்ள பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். எனினும் வறுமை காரணமாக 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 3.5 கி.மீ. நடந்தே பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளார். அதன் பின்னர், அரசு கொடுத்த இலவச சைக்கிள் பேருதுவியாக இருக்க, அதனை வைத்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.
இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிப்பு செய்தும், விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டே மேய்த்தும் நாகராஜ் படித்து வந்துள்ளார். இப்படியான சூழ்நிலையில் மருத்துவம் படிக்கும் கனவு இவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், 12-ம் வகுப்போடு சேர்த்து நீட் தேர்வுக்கும் பயிற்சி அளித்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து மருத்துவத்துக்காக நீட் தேர்வுக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வந்த இவர், அமராவதி புதுார் உழவர் பயிற்சி மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இலவச 'நீட்' பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றார்.
இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளியான நாகராஜ் 136 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நாகராஜுக்கு இடம் கிடைத்துள்ளது.