தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார்.
இந்நிலையில் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ”தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நோக்கம் வெற்றி பெறட்டும். முதலீட்டாளர்கள் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்” தெரிவித்துள்ளார்.
அதேபோல் ந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், ”தங்களின் வெளிநாட்டுப் பயணம் எல்லாச் சிறப்புகளையும் பெற்று வரலாறு படைக்கும் வெற்றிப் பயணமாகத் திகழ வாழ்த்துகிறோம். தங்களின் நல்லாட்சியின் பேரும் புகழும் மாநிலத்தில் மட்டுமின்றி நானிலம் முழுவதிலும் பேசு பொருளாக வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.