தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”நாளை முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற நகரங்களின் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறேன். 17 நாட்கள் அரசுப் பயணமாக அமெரிக்கவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருக்கிறேன்.
இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு 18,1521 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய வகையில் ரூ.10,882 கோடிக்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.93 லட்சம் கோடியாகும். அதோடு 18 18 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உறுவாக்கப்பட்டுள்ளது. 2030க்குள் ஒரு இலட்சம் கோடி டாலர் இலக்கை எட்டுவோம். உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்க்க அமெரிக்கா செல்கிறேன். இந்த பயணம் நிச்சயம் வெற்றிகரமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.