ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை - வெண்ணிலா தம்பதி. இவர்களுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சூழலில் நேற்று (ஆக. 09) பகல் சுமார் 12 மணியளவில் பெண் ஒருவர் வெண்ணிலாவிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்படியே குழந்தையை எடுத்து கொஞ்சிய அவர், அதன் கண்கள் மஞ்சளாக இருப்பதாகவும், அது மிகவும் ஆபத்து என்றும் கூறியுள்ளார். இதையடுத்து தானே குழந்தையை கண் மருத்துவரிடம் காட்டுவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளார். அவ்வாறு எடுத்து சென்ற அவர் நீண்ட நேரமாகியும் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த வெண்ணிலா குடும்பத்தினர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தெரிவித்ததோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் மாஸ்க் அணிந்து, அந்த குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த பெண் யாரென்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், குழந்தையை விரைந்து மீட்க சேலம் மாநகர காவல்துறையினர் பிரதான சாலைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
மேலும் சேலம் மாநகர காவல்துறை சார்பில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்தேகத்திற்குரிய விதமாக குழந்தையுடன் வந்த பெண் ஒருவரை போலீசார் விசாரிக்கையில், அந்த குழந்தையை கடத்திய பெண் என்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பெயர் வினோதினி என்றும், அவருக்கு குழந்தை இல்லாததால் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை எடுத்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
தற்போது விநோதினியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து காணாமல் போன பச்சிளம் குழந்தையை 15 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.