தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.07.2024) சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் பேசியதாவது,

தமிழ்நாடு முழுக்க நான் சுற்றிக் கொண்டிருந்தாலும், கொளத்தூருக்கு வருகின்றபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம், ஒரு எழுச்சி ஏற்படுகின்றது. அதுவும் கொளத்தூரில் இருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை பார்க்க வருகின்றபோது அதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகின்றது.

அதனால்தான், எவ்வளவு வேலைகள் இருந்தாலும், முடிந்த அளவுக்கு பத்து நாளுக்கு ஒரு முறையோ; வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு நான் வந்து விடுகிறேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புத்துணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது!

எனக்காக கொளத்தூரை பாதுக்காக்கக் கூடியவராக என்னுடைய சார்பில் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு இருந்து கொண்டிருக்கிறார்.

கொளத்தூர் தொகுதியை பொருத்தவரைக்கும், நம்முடைய பணிகளால் ஒரு முன்மாதிரி தொகுதியாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படி சொல்வதினால் எனக்கு ஏதோ ஒரு சுயநலம் (selfish) என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தாலும் சரி, கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி, தோழமைக் கட்சியாக இருந்தாலும் சரி, அனைத்து தொகுதிகளிலும் ஒரே கண்ணோட்டத்தோடு தான் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அந்த அடிப்படையில்தான், இந்த கொளத்தூர் தொகுதியில்,

➢ புதிய வட்டாட்சியர் அலுவலகம்

➢ புதிய காவல் துணை ஆணையாளர் அலுவலகம்

➢ புதிய காவல் நிலையம்

➢ புதிய தீயணைப்பு நிலையம்

➢ புதிய சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவும் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் இல்லை; தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு வர இருக்கிறது.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்களுடைய தொகுதிக்கு தேவையான பத்து திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அறிவித்தேன். அது ஆளுங்கட்சி மட்டுமல்ல; எதிர்க்கட்சி மட்டுமல்ல; அனைத்து 234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசரமாக உங்கள் தொகுதிக்கு முதற்கட்டமாக 10 திட்டங்களை கொடுங்கள்.

அந்த 10 திட்டங்களில் எதை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி, அதை அறிவித்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் கிடையாது. நம்முடைய மாநிலத்தில் மட்டும்தான். நம்முடைய கழக ஆட்சியில்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான்.

எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் எதிர்க்கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, திட்டங்களை எல்லாம் நாம் வரிசைப்படுத்தி, முறைப்படுத்தி, விரைவுப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி!

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த வெற்றியை நம்முடைய தலைவருடைய நினைவிடத்திற்குச் சென்று நான் மாலை வைத்து, மரியாதை செய்தேன். அப்போது பத்திரிகை நிருபர்கள் என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது இடையில் ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு நான் பதில் சொன்னேன். இந்த ஆட்சி, எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல; ஓட்டுப் போட தவறியவர்களுக்கும் சேர்த்து, அதாவது ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சியடையவேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் ஐய்யய்யோ இப்படிப்பட்ட ஆட்சிக்கு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு எங்கள் ஆட்சி இருக்கும் என்று அன்றைக்கு சொன்னேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பாக, நம்முடைய பெருமதிப்பிற்குரிய அய்யா பொன்னம்பல அடிகளார் வந்தவுடனே சொன்னார்கள். இதுவரைக்கும் அறநிலையத் துறையில் இப்படி ஒரு அமைச்சர் இருந்து பணியாற்றியதை நான் பார்த்ததே கிடையாது என்று என்னிடம் பெருமையாக சொன்னார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அந்த அளவிற்கு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், அதில் அமைச்சராக இருக்கக்கூடிய சேகர் பாபு அவர்கள் மற்றும் அவருடன் துணையாக இருக்கக்கூடிய அதிகாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அதையெல்லாம் இப்போது பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்றால், நேரம் போதாது. இந்த நிகழ்ச்சி முழுக்க அது பற்றியேதான் பேசிக் கொண்டு இருக்கவேண்டும். இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு நான் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், ஹைலைட்டான சில திட்டங்களை தலைப்புச் செய்திகளாக மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

இதுவரைக்கும் 1921 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கக்கூடிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. 6147 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டியிருக்கிறோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி வருகிறோம். அதில் ஒரு கல்லூரிதான் மயிலை கபாலீஸ்வரர் கல்லூரி என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

இறைப்பணியோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்கிறது. அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவுத் துறையாகவும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், 748 மாணவ மாணவியருக்கு கல்விக் கட்டணமும், கல்விக்குத் தேவையான கருவிகளையும் வழங்கியிருக்கிறோம். உங்களுக்கு மட்டுமில்லை, கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் நாள் இந்தக் கல்லூரியை திறந்து வைத்ததிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,405 மாணவ மாணவிகளுக்கும் இதேபோல கல்விக் கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கியிருக்கிறோம்.

சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று, இது எதுவுமே ஒருவர் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம். கல்விதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து. இதைத்தான் நான் தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

‘படிப்பு - படிப்பு - படிப்பு’ இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்கவேண்டும். அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, இதுவரைக்கும், அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்து, இதுபோல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன்.

படிப்புடன் சேர்த்து பல்வேறு தனித்திறமைகளையும் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேறவேண்டும். பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, படைப்புத் திறமை, நிர்வாக ஆற்றல், அறிவியல்பூர்வமான சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு என மாணவச் சமுதாயம் வளரவேண்டும். பட்டங்களோடு சேர்த்து அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக நீங்கள் வளரவேண்டும்!

அண்மையில் டாக்டர் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் அவர்கள், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுக் காட்டினார். உடல்நலத்தைப் பற்றி அக்கறையோடு அவர் பேசியிருக்கிறார். மாணவர்கள், இளைஞர்கள் இடையே obesity எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லியிருக்கிறார். சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், துரித உணவுகள்தான் இதற்குக் காரணம் என்று அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்! எனவே, உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும்; திறமைகளை வளர்த்துக் கொள்ளமுடியும். அந்த வகையில்தான், மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும், உடல் நலத்திலும் சிறந்தவர்களாக வளர்ந்து, மாபெரும் சக்தியாகத் திகழ வேண்டும் என்று கேட்டு, இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைந்து, உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories