தமிழ்நாடு

சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை சந்தியா தேவி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (29.7.2024) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக, 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார்.

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களின் நலன் காக்கும் வகையிலும், அவர்களுக்கான தகுந்த அங்கீகாரம் தரும் வகையிலும், திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகள், முத்தமிழறிஞர் கலைஞர் காலம் தொடங்கி, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடரப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருநங்கையர்களின் நலன் காத்திட கழக அரசு செயல்படுத்திய மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களாக பின்வருவன வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாம் பாலினத்தவர் என்ற பெயருக்கு மாற்றாக அவர்களின் சுயமரியாதையை காக்கும் வகையில் “திருநங்கை” என்ற பெயரினை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

திருநங்கைகளுக்கு சமூக மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தை தோற்றுவித்தார்.

அந்நலவாரியத்தின் வாயிலாக அவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை, தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயதொழில் புரிந்திட மானியம், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.1,500/- மாதாந்திர ஓய்வூதியத் தொகை, திருநங்கைகள் உயர்கல்வி பயின்றிட கல்வி கனவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை 9,080 திருநங்கைகளுக்கு நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, 617 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய மானியமும், 1,599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், கட்டணமில்லா பேருந்து பயண திட்டமான விடியல் பயணத் திட்டத்தில் திருநங்கைகள் 29.74 இலட்சம் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிறந்த திருநங்கை விருது

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு, சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி அவர்கள் பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார். வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். தோவாளையைச் சார்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, 8 வயது மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

இவ்வாறு, திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது சேவையைப் பாராட்டி, முதலமைச்சர் இன்றைய தினம், திருநங்கை சந்தியா தேவி அவர்களுக்கு சிறந்த திருநங்கை விருது, 1 இலட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி பாராட்டினார்கள்.

banner

Related Stories

Related Stories