மேற்கு டெல்லி பகுதியில் உள்ள பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் ஏராளமான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள மையங்களில் கேரளா,உத்தர பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தற்போது டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த பகுதியில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள பயிற்சி மையத்தின் அடிப்பகுதியில் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்த நிலையில், இந்த வெள்ளத்தில் அங்கு இருந்த மாணவர்கள் சிக்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் உதவி கோரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து நூலகத்தில் சிக்கிக்கொண்ட ஏராளமானோரை மீட்டனர். எனினும் வெள்ள நீரில் சிக்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் என 3 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மையத்தின் தரைதளத்தை சேமிப்பகம் அல்லது வாகன நிறுத்தப் பகுதியாக மட்டுமே பயன்படுத்த டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் விதிகளை மீறி நூலகம் அமைத்திருந்தது தெரியவந்தது. இதனால் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு டெல்லி மாநகராட்சியை 10 ஆண்டுகள் ஆண்ட பாஜகவே பொறுப்பு என ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.