முரசொலி தலையங்கம்

"எதற்காக காற்றில் கம்பு சுற்ற வேண்டும்?" - மோடியை காட்டமாக விமர்சித்த முரசொலி !

"எதற்காக காற்றில் கம்பு சுற்ற வேண்டும்?" - மோடியை காட்டமாக விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலைங்கம் (29.7.2024)

நிதி ஆயோக்கை கலைத்து விடுங்கள்

...........................................

2014 ஆம் ஆண்டு முதல் முறை பிரதமர் ஆனபோது மோடி செய்த முதல் செயல், அதுவரை இருந்த திட்ட கமிஷனைக் கலைத்தது தான். மாநில முதலமைச்சர்கள் கூடிப் பேசி தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பெறும் அமைப்பாக அது இருந்தது. வந்ததும் அதனைத் தான் கலைத்தார். அதன் பிறகு அவர் உருவாக்கியது தான் இந்த ‘நிதி ஆயோக்’.

முதலமைச்சர்களிடம் கலந்தாலோசனை செய்வது இல்லை. அவர்களாக திட்டங்களை அறிவிப்பார்கள். ஒப்புக்கு ஒரு கூட்டம் நடத்துவார்கள். அது 5 நிமிடம் நேரம் கொடுப்பார்கள். அவ்வளவு தான் கூட்டம் கலைந்து விடும். இது தான் அவர்கள் மாநிலங்களை நடத்தும் லட்சணம் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு எந்தப் புதிய திட்டத்தையும் அறிவிக்காத, பழைய திட்டங்களுக்கும் நிதியை ஒதுக்காத ஒரு நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் வாசித்தார். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியைக் கூட அவர்கள் ஒதுக்கவில்லை. இந்த நிலையில், ‘நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இதையே இந்தியாவும் வழிமொழிந்தது. நேற்றைய தினம் (27 ஆம் தேதி) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் 10 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், புதுவை ஆகிய மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. 26 முதலமைச்சர்கள் என்றால் அதில் 10 பேர் கலந்து கொள்ளவில்லை. பாதியளவுக்கு கொஞ்சம் தான் குறைவு. இதில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும் கலந்து கொள்ளவில்லை. மோடி ஆட்சியைத் தாங்கும் இருவரில் ஒருவர் நிதிஷ் குமார். அவரே போகவில்லை. இத்தனைக்கும் அவரைச் சமாதானப் படுத்த ஏராளமான நிதிகளை பீகாருக்கு வழங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. புதுவையில் பா.ஜ.க. ஆதரவுடன் தான் முதலமைச்சராக இருக்கிறார் ரங்கசாமி. அவரும் போகவில்லை. இந்தளவுக்குத் தான் நிதி ஆயோக் என்ற அமைப்புக்கு மரியாதையே கிடைக்கிறது. இருக்கிறது.

"எதற்காக காற்றில் கம்பு சுற்ற வேண்டும்?" - மோடியை காட்டமாக விமர்சித்த முரசொலி !

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அவருக்கு உரிய அளவில் பேசுவதற்கான இடமளிக்கப்படவில்லை. அவர் வெளிநடப்பு செய்திருக்கிறார். தனக்கு முன்னால் பேசியவர்களுக்கு எல்லாம் 10 முதல் 20 நிமிடங்கள் பேச அனுமதி கிடைத்ததாகவும், தனக்கு 5 நிமிடம் தான் ஒதுக்கப்பட்டது என்றும் மம்தா சொல்லி இருக்கிறார். 10 மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் அவர்களின் பிரதிநிதியாகக் கருதி முதலமைச்சர் மம்தாவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் கோரிக்கைகள் என்ன என்பதைச் சொல்வதற்கான வாய்ப்பை மம்தாவுக்கு கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய பரந்த உள்ளத்தை பிரதமர் மோடியிடமோ, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமோ எதிர்பார்க்க முடியாது.

10 மாநில முதலமைச்சர்கள் வராத நிலையில், அவர்களுக்கு தனி அழைப்பு விடுத்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. ஆனால் வழக்கம் போல தனது வார்த்தைப் பெருமைகளை மட்டும் உதிர்த்திருக்கிறார் பிரதமர்.

“வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் தேவை. வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தான் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும்” என்று பேசி இருக்கிறார் பிரதமர். இது உள்ளத்தில் இருந்து பேசியதாக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தையாவது பிரதமர் அறிவித்திருப்பார். சும்மா உதட்டளவில் பேசிய பேச்சு இது என்பது அவருக்கே தெரியும்.

மாநில முதலமைச்சர்களை எப்போதாவது அழைத்து பேசி இருக்கிறாரா பிரதமர்? எந்த முக்கியமான பிரச்சினைகளுக்காவது மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி இருக்கிறாரா பிரதமர்? எத்தனையோ கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு கொடுத்திருக்கிறதே, அதற்கான முறையான பதில் கொடுத்திருக்கிறாரா பிரதமர்? அவரை மேடையில் வைத்துக் கொண்டு எத்தனையோ முறை, எவ்வளவோ கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வைத்திருக்கிறாரே, அதற்கெல்லாம் பதில் சொல்லி இருக்கிறாரா பிரதமர்? தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வைத்த கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டுள்ளாரா பிரதமர்? எதுவுமில்லை. ‘மாநிலங்களின் கூட்டு முயற்சி’, ‘ஒத்துழைப்பு’ என்று பேசுவதற்கான உரிமை இருக்கிறதா அவருக்கு?

"எதற்காக காற்றில் கம்பு சுற்ற வேண்டும்?" - மோடியை காட்டமாக விமர்சித்த முரசொலி !

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கப் போகிறார்களாம். இதற்கு ‘விக்ஷித் பாரத்’ என்று பெயராம். 2024இல் செய்ய வேண்டியதைச் செய்யாமல், 2047 என்று எதற்காக காற்றில் கம்பு சுற்ற வேண்டும்? ‘உழும் காலத்தில் ஊருக்குப் போனால் அறுக்கும் காலத்தில் ஆள் தேவையில்லை’ என்பது பழமொழி. நிலத்தைக் கவனிக்காமல், அறுவடைக் கணக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

நிதி ஆயோக் போன்ற கண்துடைப்பு அமைப்புகளால் எந்தப் பயனுமில்லை. ஒருநாள் கூத்துக்கள் இவை. கோரிக்கைகளைச் சொல்லவும், அதற்கு உரிய பதிலை ஒன்றிய அரசு சொல்லவுமான ஜனநாயக அமைப்புகள் தேவை. மாநில முதலமைச்சர்களின் கலந்தாலோசனைகளோடு ஒன்றிய ஆட்சியை நடத்தாமல் போனால் இழப்பு பா.ஜ.க.வுக்குத் தான். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நிர்மலா சீதாராமன்கள் இல்லை. மோடி தான் இருக்கிறார்.

மாநிலங்களைப் புறக்கணித்துவிட்டு, மாநில முதலமைச்சர்களை ஒதுக்கிவிட்டு, கண்துடைப்பு கருத்தரங்குகளில் பேசுவதன் மூலமாக இந்தியாவை வளர்த்துவிட முடியாது.

banner

Related Stories

Related Stories