தமிழ்நாடு

சுரங்கங்கள் முதல் குவாரிகள் வரை... மாநில அரசுக்கே வரி விதிக்கும் உரிமை - தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!

சுரங்கங்கள் முதல் குவாரிகள் வரை... மாநில அரசுக்கே வரி விதிக்கும் உரிமை - தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கே உரியது என்று உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் தீர்ப்பு – வரவேற்கத்தக்கது – மாநில உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு! :

தமிழ்நாட்டில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள்மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு விதித்த வரியை திரும்பப் பெற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தைப் பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற ஏழு நீதிபதிகளின் தீர்ப்பு! :

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு, ‘சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுகளுக்கு இல்லை. குத்தகை எடுப்பவர்கள்தரும் ராயல்டியை மட்டுமே மாநில அரசுகள் பெற முடியும். ராயல்டி என்பதே வரிதான்’ என்று தீர்ப்பு வழங்கியது.

ராயல்டி என்பது வரியா, குத்தகைக் கட்டணமா? கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. ஒன்றிய அரசும், பல்வேறு சுரங்க நிறுவனங்களும் மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி மனுக்களை தாக்கல் செய்தன. இதுதொடர்பாக இதுவரை 80 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுரங்கங்கள் முதல் குவாரிகள் வரை... மாநில அரசுக்கே வரி விதிக்கும் உரிமை - தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! :

கடந்த 2011 ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் (25.7.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) 1957 சட்டம் (எம்எம்டிஆர்) வரை யறுக்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் சுரங்கங்கள், குவா ரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில சட்டப்பேரவைகள் பெறுகின்றன. எனவே, எம்எம்டிஆர் சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது.

ராயல்டி என்பது வரியல்ல! :

‘மாநிலங்கள் பெறும் ராயல்டி என்பது வரிதான்’ என்று கடந்த 1989 இல் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புத் தவறானது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், மாநில அரசுகளுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான்.''

இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது.

ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு :

நீதிபதி பி.வி.நாகரத்னா அம்மையார் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ‘சுரங்கங்கள், கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை’ என்று அவர் தீர்ப்பளித்தார். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.

சுரங்கங்கள் முதல் குவாரிகள் வரை... மாநில அரசுக்கே வரி விதிக்கும் உரிமை - தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!

அண்மைக்கால தீர்ப்புகளில் சிறப்பான தீர்ப்பு! :

இதுவரை கனிம நிலங்களை பயன்படுத்தியதற்கான வரி நிலுவையை மாநில அரசுகளுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா அல்லது இனி வரும் நாட்களுக்குத்தான் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பது குறித்து வரும் 29 ஆம் தேதி விளக்கம் அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலத்தில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அரசமைப்புச் சட்ட அமர்வுகளின் தீர்ப்புகளிலேயே இத்தீர்ப்பு மிகவும் சிறப்பு வாய்ந்த தனி முக்கியத்துவம் பெற வேண்டிய முத்திரைத் தீர்ப்பாகும் (A Landmark Judgement).

காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் உள்ள மூன்று பட்டியல்களின்கீழ் வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள்பற்றிய தெளிவுபடுத்தும், கூட்டாட்சித் தத்துவப்படி, மாநில அரசுக்குள்ள பறிக்கப்படக் கூடாத அதிகாரங்கள்பற்றி இது மிகவும் துல்லியமாகவே விளக்கும் தீர்ப்பாகவும் அமைந்துள்ளது.

அதோடு நாடளுமன்றமே முன்வந்து ஒரு தனிச் சட்டமியற்றி, மாநிலத்திற்கென அரசமைப்புச் சட்ட கர்த்தாக்கள் அளித்துள்ள உரிமைகளைப் பறித்துவிட முடியாது; கூடாது என்ற சட்ட விளக்கம் இத்தீர்ப்பில் ஆணியடித்துக் கூறப்பட்டு ஒரு நல்ல முன்மாதிரியையும் தந்துள்ளது! தமிழ்நாடு அரசு முன்பு தொடர்ந்த வழக்கே, இதன் தொடக்கப் புள்ளியாகும். மற்றொரு முக்கிய அம்சமும், சட்டத்தின் ஆட்சியில் இத்தீர்ப்பின்மூலம் சுட்டிக்காட்டப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது!

80 மேல்முறையீட்டு மனுக்கள்! :

1989 ஆம் ஆண்டு இதே வழக்கை ஏழு (7) உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, மாநில உரிமைப் பறிப்புக்கு ஆதரவாக, ''கனிம வளங்கள், சுரங்கங்கள், நிலக் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது; மாநில அரசுகளுக்கு இல்லை. குத்தகைதாரர்கள் தரும் ராயல்டியை மட்டுமே மாநில அரசுகள் பெற முடியும்'' என்று கூறியதைத் தலைகீழாக்கி விட்டது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் தலைமையில் அமைந்த 9 பேர் அடங்கிய புதிய அரசமைப்புச் சட்ட அமர்வு!

தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட கருத்தை ஒரு பகுதிக்கு கூறியுள்ளபோதிலும், 8 நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின்படி மாநில அரசுக்கு வரி போட உரிமை உண்டு என்பதும், வரி என்பது வேறு, ராயல்டி என்பது வேறு என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 80 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பழைய வழக்கில், மீண்டும் 2011 இல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாறிய பிறகு (25.7.2024) தீர்ப்பு வழங்கினர்.

''மாநில அரசுகள் – மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திட போதிய நிதி ஆதாரங்கள் அவற்றுக்கு இருக்கவேண்டாமா?'' என்று பொருள் பொதிந்த கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளது – மிகவும் சரியான எதார்த்தத்தைப் புரிந்துகொண்ட ஒரு நேர்மைமிக்க கேள்வி.

குறிப்பிட்ட சில தீர்ப்புகள் எதிர்காலத்தில்கூட மாறும் என்பதற்கு அடையாளம்! :

அந்தக் கனிம வளங்கள், சுரங்கங்கள், நிலக் குவாரிகளில் ஏதாவது பிரச்சினை என்றால், உடனடியாகத் தலையிட்டு, அவர்களைக் காப்பாற்றி, வழிநடத்தும் செயற்பாடு, மக்களை உண்மையிலேயே ஆளும் மாநில அரசுகளுக்கே உள்ள மறுக்கப்பட முடியாத உரிமையாகும்! 1989 ஆம் ஆண்டைய பழைய தீர்ப்பு இதன்மூலம் செல்லாததாக்கப்பட்டுள்ளது! இதுபோல், இன்றைய சட்ட தீர்ப்புகள் பல – எதிர்காலத்தில் மாறும் என்பதற்கும் இது ஒரு முன்னோட்டமாகும்!

banner

Related Stories

Related Stories