சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 85,737 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 85% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் நாட்கள் உள்ளதால் 100% சேர்க்கை நடைபெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தின் அடிப்படையில் மாணவிகளின் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள இடங்களுக்கு இறுதியாக தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
பொறியியல் முதுகலை கலந்தாய்விற்கு வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், 13-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். மேலும் ஆகஸ்ட் 28-ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான முடிவுகள் வரும் 26-ம் தேதி அறிவிக்கப்படும். பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை குறித்து துறை செயலாளர்கள் மற்றும் துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்." என்றார்.
முன்னதாக இளநிலை பொறியியல் கலந்தாய்வு கடந்த ஜூலை 22 (நேற்று) தொடங்கிய நிலையில், செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.