மு.க.ஸ்டாலின்

”வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

”வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின்
கொள்கை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (23.07.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரை:-

இந்தியாவிலேயே முதன்முதலாக வணிகப் பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

25.9.1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நல வாரியம் இன்று வரைக்கும் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது. முதலமைச்சரைத் தலைவராகவும், வணிவரித்துறை அமைச்சரைத் துணைத்தலைவராகவும் கொண்டு இந்த நல வாரியம் அமைக்கப்பட்டது.

தலைவர் கலைஞர் அவர்களால் இந்த வாரியம் உருவாக்கப்பட்ட போது அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி இந்த எண்ணிக்கையை 30 பேர்களாக நம்முடைய அரசு உயர்த்தியது.

இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது வாரியத்தின் துவக்க நிதியாக 2 கோடி ரூபாயாக இருந்தது. அது 2012-ஆம் ஆண்டு 5 கோடியாகவும், 2017-ஆம் ஆண்டு 10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது 4 கோடியே 5 இலட்சம் ரூபாய் திரட்டு நிதி கையிருப்பு உள்ளது.

தொடக்கத்தில் நடைபாதை வணிகர்கள் இல்லாமல் மற்றவர்கள் 500 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி உறுப்பினர் ஆகலாம் என இருந்தது. இந்த உறுப்பினர் கட்டணத்தில் சலுகை தர நம்முடைய அரசு முடிவெடுத்ததை உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும், 15.7.2021 முதல்14.10.2021 வரை மூன்று மாத காலத்திற்குள் உறுப்பினர்களாகச் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லை என்று அறிவித்தோம். பல்வேறு வணிகர் சங்க பேரமைப்புகள் இந்தச் சேவையை மேலும் நீட்டிக்கச் சொன்னார்கள்.

அதை ஏற்று 31.3.2022 வரை நீட்டித்தோம். இந்த சேவையின் வாயிலாக 40 ஆயிரத்து 994 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நான் மகிழ்ச்சியுடன்உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதுவரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம், தமிழ்நாடுமதிப்பும் கூட்டு வரிச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வருகை தந்திருக்கக்கூடிய வாரிய உறுப்பினார்களாகிய உங்களிடம் இந்த நேரத்தில் நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்று கேட்டால், அடுத்த கூட்டத்திற்குள் இந்த எண்ணிக்கை நீங்கள் அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கழக அரசு அமைந்த பிறகு இவ்வாரியத்தின் மூலமாக ஏராளமான நலத்திட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன என்பதைஉறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும்.

கல்வி உதவித் தொகையாக ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 ஆயிரம்ரூபாயும், தொழிற்கல்வியாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாயும்வழங்கப்பட்டு வருகிறது. இதனால், 94 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளார்கள்.

வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிதியை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்கி வருகிறோம்.

வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மரணம் ஏற்பட்டால்,அவர்களது குடும்பத்துக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்ட நிதி உதவியை3 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். இதுவரைஇத்திட்டத்தின் கீழ் 390 குடும்பங்களுக்கு நிதிவழங்கப்பட்டிருக்கிறது.

வியாபார நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால், 5 ஆயிரம் ரூபாய் என வழங்கப்பட்ட நிதியை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினோம்.29 உறுப்பினர்கள் இந்த நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள்.

விபத்து உதவியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கஉத்தரவிட்டுள்ளோம்.

இதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சைகளுக்கு மருத்துவ சான்றின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவியும் 3 ஆயிரம் ரூபாய்முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

நலிவுற்ற வணிகர்கள் திட்டத்தின் கீழ் பெட்டிக்கடை அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 8 ஆயிரத்து 883 வணிகர்கள் பல்வேறு நிதி உதவிகளைப் பெற்றுள்ளார்கள். 3 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இது போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் அடிக்கடி என்னை வந்துசந்திப்பார்கள். அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வழங்கிக் கொண்டு வருகிறோம்.

சமீபத்தில் கூட உள்ளாட்சி அமைப்புக்களால் கடைகளுக்கு திறப்பு விழா, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வணிக உரிமங்கள் 1.4.2024 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற வகையில் இதற்குரிய விதிகள், திருத்தி ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கான குத்தகை 9 ஆண்டுகள் என்று இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகளில் திருத்தம் செய்து 1.8.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

இதுபோன்ற செயல்கள் நாங்கள் சொல்லி, நீங்கள் செய்வதாக இல்லாமல், நீங்களே முன்வந்து செய்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழை காணமுடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. அந்த அளவுக்கு பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசின் கொள்கை. அது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

மிகப்பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்ல – சிறுகடைகளும், வியாபாரிகளும் தங்களது வணிகத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

சிறு வணிகர்களும், வணிக நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதாக அமைந்துள்ளது.

வணிகர்கள் தங்கள் வணிகத்தை அமைதியாக நடத்தும் வகையில் அமைதிமிகு மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. உங்களது வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை. அதுபோலதான் செயல்படுகிறோம். உங்களது கோரிக்கைகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் எங்களைச் சந்தித்துச் சொல்லலாம். ஆண்டுதோறும் வணிகர் சங்கப்பேரவை மாநாடுகளில் நானோ அல்லது அமைச்சர்களோ கலந்து கொள்கிறோம்.

நமக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது, இருக்கவும் கூடாது. எனவே, இதனை மனதில் வைத்து வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடனும் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories