சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க. சட்டத்துறைச் சார்பில் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் நடைபெறும் என தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு :
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும் - மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், கடந்த 5.7.2024 அன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நுழைவு வாயிலில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து 6.7.2024 சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் "மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்" இந்தியாவே வியந்து நோக்கும் வண்ணம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து,
அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை அவர்கள் முன்னிலையில் “கருத்தரங்கம்” 20.7.2024 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள “இராஜா அண்ணாமலை மன்ற”த்தில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில், ஒருங்கிணைந்த சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இதனைத் தொடர்ந்து, 21.07.2024 காலை 9.00 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள “ஓட்டல் ரமடா”வில், எனது தலைமையில் “தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட/ மாநகர அமைப்பாளர்கள் மற்றும் சட்டத்துறை மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்” நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் துவக்கவுரை ஆற்றிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றிட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிறைவுரையாற்றிட உள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு அந்தந்த மாவட்ட/மாநகர அமைப்பாளர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வருகிற 27.7.2024 அன்று மாலை 4.00 மணியளவில் தென்மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சித்த மருத்துவமனை அருகில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தென் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை அவர்கள் முன்னிலையில் “கருத்தரங்கம்”நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."