தமிழ்நாட்டின் மீதும், இங்கு வாழும் தமிழர்கள் மீதும் அவதூறாக பேசி, இரு மாநில மக்கள் இடையே மோதல்போக்கை ஏற்படுத்த முயலும் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவாலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் விவரம் வருமாறு:-
20.05.2024 அன்று ஒடிசா மாநிலம் பூரி நகரில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் திரு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் பேசும்போது "நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்று நேரடியாக மக்கள் மன்றத்தில் தமிழ்நாட்டின் மீது குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.
அவரின் இந்த அவதூறு பேச்சு அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலை தளங்களிலும் வெளிவந்துள்ளது. இந்த அவதூறு பேச்சின் உள்நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை திருடர்களாக இந்திய மக்கள் மனதில் ஒரு தவறான கருத்தை சித்தரித்துள்ளார். மேலும் ஒடிசா மக்கள் மனதில் தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு வெறுப்பையும், மோதல்போக்கையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அவதூறு பேச்சு அமைந்துள்ளது. அவர் குற்றம் சுமத்தும் பொழுது ”மக்கள் கூறுகின்றனர்” என்று பேசியுள்ளார் .
நேரடியாக எந்த மக்கள் அல்லது எந்த தனிநபர் அவ்வாறு கூறினார்கள் என்பதை தெளிவாக நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் குறிப்பிடவில்லை, அதனால் அவரை நேரடியாக விசாரித்தால் தான் தமிழ்நாட்டின் மீதான அவரது குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தெரியவரும்.
பூரி ஜெகந்நாதர் கோயில் என்பது இந்தியாவிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும் பொதுவானது. தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டு வருவது காலம் காலமாக நடந்துவரும் இயல்பான ஒன்று. தற்போது திரு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்களின் இந்த வன்மம் நிறைந்த அவதூறு பேச்சால் இனிவரும் காலங்களில் தமிழக பக்தர்கள் சுதந்திரமாக, தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பாக, பூரி ஜெகந்நாதரை தரிசிக்க முடியுமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த வன்மம் நிறைந்த பேச்சு தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரான ஒன்று. திரு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் பூரி நகரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது பேசிய இந்த வெறுப்பை தூண்டும் அவதூறு பேச்சு இரு மாநில மக்களிடையே காலம் காலமாக நிலவி வரும் ஒரு சுமுக உறவை சீர்குலைப்பதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மீதும் இங்கு வசிக்கும் 7.7 கோடி தமிழர்கள் மீதும் இந்திய மக்கள் மனதில் ஒரு வெறுப்பையும், கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டபோது தன்னை சந்தித்த பெண்கள் இந்தியாவில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக கூறியதாக காஷ்மீரில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் காஷ்மீரில் சொன்ன அந்த கருத்துக்கு டெல்லி காவல்துறையினர் தாமாக முன்வந்து அவர் சொன்ன கருத்துக்கு விளக்கம் தருமாறு அவரை விசாரித்தனர். திரு ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறையினர் தாமாக முன்வந்து அவர் சொன்ன கருத்துக்கு எதிராக எப்படி விசாரணை செய்தார்களோ, அதேபோல் திரு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் பூரி நகரில் தமிழ்நாட்டின் மீது அவதூறாக பேசிய கலக கருத்தையும் தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்.
நரேந்திர தாமோதர் தாஸ் மோடி பேசிய இந்த அவதூறு பேச்சை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், சமூக வலை தளங்களிலும் பார்த்த ஏராளமானோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டின் மீதும், மறைமுகமாக தமிழர்கள் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாக பேசிய பேச்சுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நற்பெயருக்கும், இங்கு வசிக்கும் தொன்மையான நாகரிகத்தை பின்புலமாக கொண்டுள்ள தமிழர்கள் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாக அவதூறு பேசிய திரு நரேந்திர தாமோதர் தாஸ் மோடியை தமிழக காவல்துறை விசாரித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.