பிரமதர் மோடியை கடவுள் அனுப்பி வைத்தார் என்றால் அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும். ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு கடவுள் பணியை பிரதமர் மோடி செய்யட்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு :
'பயாலஜிக்கலாக நான் பிறக்கவில்லை, கடவுள் தான் அனுப்பி வைத்தார்' என்று அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டு காலத்தில் பிரதமர் மோடி இப்படி ஒரு பதிலை சொன்னால், அவரை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லலாம் என்று பேசுவது ஒரு பித்தலாட்டம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை இருக்க வேண்டிய பிரதமர், ஒடிசாவுக்கு சென்று தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார். வி.கே பாண்டியன் தமிழகத்திற்கு பெயர் தேடிக் கொடுக்கிறார். அவரை பார்த்து ஒரு ஆம்பளை கூட இல்லையா என்று கேட்பது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல்.
தமிழகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியாக இருப்பவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களை நாங்கள் யாராவது விமர்சித்துள்ளோமா? ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது தமிழகத்தை சேர்ந்த ராஜாஜியிடம்தான் கஜானா சாவியை கொடுத்தார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது தமிழரை தான் ஆங்கிலேயர் நம்பினார்.
பிரமதர் மோடியை கடவுள் அனுப்பி வைத்தார் என்றால் அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும். ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு கடவுள் பணியை பிரதமர் மோடி செய்யட்டும். தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடியின் மீது புகார் கொடுத்தால் அவரை விசாரிக்காமல் பாஜகவின் தலைமைக்கு விளக்கம் கேட்பது தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
தேர்தல் ஆணையம் முழுக்க, முழுக்க மோடிக்கும் பாஜகவுக்கும் சாதகமாக செயல்படுவது இதிலிருந்து தெரிகிறது. ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் இதையெல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். ஒடிசாவில் ஒரு ஆம்பளை கூட இல்லையா என்று அமித்ஷா கேட்கிறார். குஜராத்தில் பிறந்த மோடி, உத்தர பிரதேசத்தில் போட்டிடுகிறார். இதை அந்த மக்கள் கேட்டால் நிலைமை என்னவாகும்?" என்றார்.