தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து இன்று மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் காலை 9.30 மணியளவில் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியானது. மாணவர்கள் தேர்ச்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் 96.44% தேர்ச்சி பெற்று மாணவிகளே சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இது கடந்த ஆண்டை (2023) விட 0.53% உயர்ந்துள்ளது. இதில் அதிகளவாக கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் 6,996 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் பொதுத் தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் (92%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி பொதுத் தேர்வெழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரான சென்னையை சேர்ந்த திருநங்கை நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோல் மேலும் மாவட்ட வாரியாக திருப்பூரில் 97.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துளளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
" பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.