ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புக்கான இந்த 2023 - 2024 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
அதன்படி www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், இந்த முறையும் வழக்கம் போல் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வெழுதிய 7,60,606 மாணவர்களில் 7,19,196 (94.56%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%-மும், மாணவர்கள் 92.37%-மும் தேர்ச்சி பெற்று, மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வெழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அரசுப்பள்ளிகள் 91.02% தேர்ச்சி பெற்றுள்ளது. அதே போல் அதிகளவாக கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் 6,996 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும் மாவட்ட வாரியாக திருப்பூரில் 97.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஈரோடு மற்றும் சிவகங்கை 97.42% பெற்று இரண்டாம் இடமும், அரியலூர் 97.25% பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. இதில் திருப்பூரில் மாணவர்கள் 96.58%-மும், மாணவிகள் 98.18%-மும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதோடு அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் 95.75% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது திருப்பூர். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் (92%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :
அரசுப்பள்ளிகள் - 91.32%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 95.49%
மகளிர் பள்ளிகள் - 96.39%
ஆண்கள் - 86.96%
இருபாலர் பள்ளிகள் - 94.7%
பாடப்பிரிவு வாரியாக 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தமிழ் - 35
ஆங்கிலம் - 7
இயற்பியல் - 633
வேதியியல் - 471
உயிரியல் - 652
கணிதம் - 2,587
தாவரவியல் - 90
விலங்கியல் - 382
கணினி அறிவியல் - 6,996
வணிகவியல் - 6, 142
கணக்கு பதிவியல் - 1,647
பொருளியல் - 3,299
கணினி பயன்பாடுகள் - 2,251
வணிக கணிதம் - 210