2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் ’பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பாடப் பகுதியின் இறுதியில் ’தமிழ் வெல்லும் ’என்று கலைஞரின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக் கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ்க் கலைஞர், கவிதைக் கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர் போன்ற தலைப்புகளின் கீழ் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளது.