டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் அகமதாபாத்-ல் நேற்று நடைபெற்றது. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு குழுவினர் ஆலோசனை செய்து ரோஹித் சர்மா தலைமையிலான 15பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தனர்.
இதில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்த நிலையில், கலீக் அகமது, அவிஷ் கான் ஆகிய பந்துவீச்சாளர்கள் மாற்று வீரராக இடம்பிடித்துள்ளனர். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்களை விட அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, எக்கனாமியாக பந்துவீசி அசத்திய நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு வீரர் பத்ரிநாத், “ மற்ற வீரர்கள் ஒரு மடங்கு perform செய்தால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்குள் சென்றுவிடலாம், ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் ஏன் இரண்டு மடங்கு உழைத்தாலும் உலகக்கோப்பைக்கு எடுத்துசெல்லப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஏன் தொடர்ந்து தமிழ்நாடு வீரர்கள் மட்டும் பாதுகாக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அஸ்வின், முரளிவிஜய் போன்ற வீரர்கள் 2 போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் மற்ற வீரர்களுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். காலங்காலமாக இப்படித்தான் தமிழக வீரர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். வேறு யாரும் இதற்கு குரல் கொடுக்காத நிலையில், தற்போது நான் இதை கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.