voice of TN என்ற அமைப்பின் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பாகத்தில் ”மோடி வித்தையின் முடிவு?” என்ற தலைப்பில் கருத்தரங்கில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர், ”நூறாண்டுகளாக நாம் போராடி பெற்ற உரிமைகள் எல்லாவற்றையும் மோடி அரசால் தற்போது இழந்து வருகிறோம். பாசிசத்தை துணிச்சலுடன் தமிழ்நாடு எதிர்க்கிறது. வட மாநில மக்களும் பாசிசத்தின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள தமிழ்நாடு உதவ வேண்டும்.
EVM தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் சொல்லுக்கு தலையாட்டுகிறது.
எதிர்க்கட்சி முதலமைச்சர் கைது, வங்கி கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகளை பயன்படுத்தி இந்த தேர்தலை பா.ஜ.க அரசு நடத்துகிறது. நம் தலை மீது கத்தி ஒன்று தொங்கிக் கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
ஒன்றிய அரசை துணிச்சலுடன் எதிர்கொண்டு மாநில சுயாட்சியை தமிழ்நாடு நிலை நிறுத்தி வருகிறது. மாநில சுயாட்சைக்காக தமிழ்நாட்டை தொடந்து கேரள, கர்நாடகா குரல் கொடுத்து வருகிறது.
65% இளைஞர் நாம் நாட்டில் வேலை இல்லாமல் உள்ளனர். 45,000 இந்திய ரயில்வே பணியிடங்களுக்கு 1.25 கோடி பீகார் இளைஞர் விண்ணப்பிக்கின்றனர். வேலை கிடைக்காததால் கோடி கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக செல்கிறார்கள்
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடையாது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு நீதி கேட்டு போராடும் நிலையில் இந்த நாடு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், மூத்த பத்திரிக்கையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.