டெஸ்லா நிறுவன சி.இ.ஓ.வும் உலக பணக்காரரின் ஒருவருமான எலான் மஸ்க் இம்மாதம் இந்தியா வரவும் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க், இந்தியா வர இருப்பதை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயணத்தை போல் பெரிதுபடுத்த பாஜக. திட்டமிட்டிருந்தது.
ஆனால், தனது இந்திய பயணத்தை எலான் மஸ்க் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,”துரதிர்ஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் வருகை ரத்தானதால் பாஜகவினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்கவுள்ளதால் பிரதமர் மோடியை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தே எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்க பட்டிருப்பதாக இந்தியா கூட்டணி கட்சியினர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க், சீனப் பிரதமரைச் சந்திக்க நேற்று சீனாவுக்கு சென்றுள்ளது பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது. இது குறித்து தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, "இந்திய பிரதமரான தன்னை சந்திக்க வரும் எலான் மஸ்க் வருகையை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள மோடி எதிர்பார்த்தார்.ஆனால் இந்திய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க், சீனப் பிரதமரைச் சந்திக்க நேற்று சீனாவுக்கு சென்றுள்ளார்.
மோடி உலகில் மிகவும் மதிக்கப்படுபவர் என்று பாஜக கூறுகிறது. ஆனால் அவருக்கு கிடைக்கும் மரியாதை என்பது பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட இந்திய பிரதமர் என்ற பாரம்பரியத்துக்காகத்தான். ஒரு பாதுகாப்பற்ற மற்றும் திறமையற்ற தலைவரான மோடி, உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் CEO-களை தனது சொந்த இமேஜ்க்காக மட்டுமே பயன்படுத்துகிறார்"என்று விமர்சித்துள்ளார்.