திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி தகாத வார்த்தைகளால் பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற போது சங்கீதா தனது கைபேசியில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோவில், “பாஜகவினர் பிரச்சாரத்தின் போது, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினார்கள். அப்போது உங்கள் ஆட்சியில் சானிட்டரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து கேள்வி எழுப்பினர். என்னைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களும் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எனது கடைக்கு வந்து தகாத வார்த்தைகளினால் என்னை திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளனர்” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் !
கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வின் 5 தடியர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையா?” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள, ஆற்றுப்பாளையத்தில் பாஜகவினர் ஒரு பெண்ணை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். பாஜக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர்களிடம், “நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி போட்டு இருக்கீங்களே நியாயமா” என்று பல பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உடனே, அங்கு ரெடிமேட் கடை வைத்திருந்த சங்கீதா என்ற பெண்ணின் கடை மற்றும் வீட்டுக்குள் நுழைந்து பாஜகவினர் தரக்குறைவான அசிங்கமான வார்த்தைகளில் அவரைத் திட்டி, தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவரையும் தாக்கி அவரது செல்போனைப் பறித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை, சங்கீதா பெயர் சொல்லி அழைப்பது வீடியோ காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறை உடனடியாக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தோல்வி பயத்துக்கு உள்ளான பாரதிய ஜனதா, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவர, பதட்டச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தமது வாக்குகளை பதிவு செய்ய வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பாஜக அச்சுறுத்துகிறது.
இந்த அராஜக முயற்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையம் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.