மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளரா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் BBC தமிழுக்கு அளித்த நச் பேட்டி!

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கே விடியல் பிறக்கும். அப்போது தமிழ்நாட்டின் விடியல் இன்னும் வெளிச்சமாக இருக்கும்.

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளரா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் BBC தமிழுக்கு அளித்த நச் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந் நிலையில், தேர்தல் களம் குறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின். முரளிதரன் காசிவிஸ்வநாதனின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதில்கள்:

1. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

முதற்கட்டத் தேர்தலில் தெற்கே தொடங்கும் இந்தியா கூட்டணிக்கான அலை இறுதிக்கட்டம் வரை நாடு முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மனதில் எழுச்சியும் மாற்றத்திற்கான தேவையும் தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு, பா.ஜ.க. மட்டுமே ஒரே கட்சி, மோதி மட்டுமே ஒரே தலைவர் என்று சொன்னவர்கள்கூட தற்போது தங்கள் சுருதியைக் குறைத்திருப்பதைக் காண முடிகிறது. பல மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு சுமுகமாக அமைந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி தன்னுடைய வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பா.ஜ.க.வின் வியூகம் தகர்க்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இது இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் என்ற மனநிலை நாடு முழுவதும் அலையாக எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதால், வரப்போகும் ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் என்று உறுதியாக நம்புகிறேன்.

2. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.கவின் நேரடிப்போட்டி அ.தி.மு.கவுடனா, பா.ஜ.கவுடனா?

களத்தில் அ.தி.மு.க.தான் நேரடிப் போட்டி. கருத்தியலில் பா.ஜ.க.தான் நாட்டுக்கே எதிரி என்பதால், பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வை வீழ்த்துவதுடன், அ.தி.மு.க.வின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் வியூகத்தையும் தகர்த்தெறியும் வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் செயல்பாடு அமையும். எங்கள் கூட்டணி முழுமையான வெற்றி பெறும்.

3. தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களான மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதாவுக்குப் பிறகு மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக பாஜ.க. கூறுகிறது. உங்கள் கருத்து என்ன? தமிழ்நாட்டில் பா.ஜ.க. இவ்வளவு தீவிரமாக போராடக் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்?

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டருமே, கலைஞரின் வார்ப்புகள். அதனால்தான், அவர் இல்லாதபோதும் கட்சி கட்டுக்கோப்பான தலைமையில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால், கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் வெற்றிடம் என்று ஏதுமில்லை. அம்மையார் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.க. எத்தனையெத்தனை பிளவுகளைச் சந்தித்துள்ளது என்பதையும், தலைமைப் போட்டியில் யார் யார் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையும் எதையெதை அடகு வைத்தார்கள் என்பதையும் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் உள்பட அனைவரும் அறிவார்கள்.

அதனால்தான், அ.தி.மு.க.வை பலவீனமாக்கி, அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பதவி ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகள் பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்த பழனிசாமி கம்பெனியாரின் செயல்பாடுகளும், பா.ஜ.க.வுக்கு விசுவாசி நீயா-நானா என்பதில் அ.தி.மு.க.வின் அனைத்துப் பிரிவின் தலைவர்களும் போட்டி போடுவதாலும், பா.ஜ.க. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆள் பிடிக்கிறது. ஆனால், மதவாத அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதால் பா.ஜ.க. இங்கே காலூன்ற முடியாது.

4. இந்தியா கூட்டணி தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்டாலும், கூட்டணி தொடர்பான ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து இருந்து வந்தன. குறிப்பாக, பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. இது கூட்டணியின் வெற்றிவாய்ப்பை பாதிக்காதா?

ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் தன்மையும் மாறுபடக்கூடியது. அதனால்தான் இந்தியா கூட்டணியின் தொடக்கக் கூட்டத்திலேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகள் முன்னெடுக்கும் வகையில் தொகுதிப்பங்கீடு, கூட்டணி வியூகம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். பெரும்பாலான மாநிலங்களில் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது.

நீங்கள் குறிப்பிடும் பிகாரில் தற்போது இந்தியா கூட்டணி வலுவான நிலையில் தொகுதிப் பங்கீடு செய்து தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதே போன்ற தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அங்குள்ள நிலைமைக்கேற்ப அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லா முடிவுகளுமே பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என்கிற ஒரே இலக்கினை அடிப்படையாகக் கொண்டவைதான்.

5. நீங்கள்தான் முதன் முதலில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தீர்கள். இப்போதும் அதே கருத்தில் இருக்கிறீர்களா?

ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கைக்குரிய இளந்தலைவராக இருக்கிறார். தன்னுடைய அயராத உழைப்பால் இந்தியா முழுவதும் நடந்து மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் உண்மையான தேசபக்தியுடன் ஒலித்தது. அதனாலேயே, போலி தேசபக்தர்கள் அவருடைய எம்.பி. பதவியைப் பறிக்க முயன்று தோற்றுப் போனார்கள். சகோதரர் ராகுல் தன்னை அரசியலில் நிலைநிறுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளும் விளம்பர மோகம் இல்லாமல், இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

6. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் அரசுகள் மீதும் தொடர்ந்து சோதனைகளை நடத்திவருகின்றன. கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எல்லா அமைப்புகளையும் இவர்கள் வளைப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.. உங்கள் கருத்து என்ன? இந்த நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகளாக இருந்தாலும், பா.ஜ.க ஆட்சியில்லாத மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தாலும் அவர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ (மத்திய புலனாய்வுத்துறை) ஆகியவை பாய்கின்றன. எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க பக்கம் தாவிவிட்டால், இந்தத் துறைகளின் பாய்ச்சல் அடங்கிவிடுவது மட்டுமல்ல, அதற்கு முன்பு வரை ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பா.ஜ.கவின் வாஷிங் மெஷினில் கறை நீங்கியவர்களாக ஆக்கப்பட்டு வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். அமைச்சர்களாக ஆக்கப்படுகிறார்கள். பிரதமர் மோதிக்கு நெருக்கமானவர்களாகி விடுகிறார்கள். பா.ஜ.க.வை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க. போன்ற கட்சிகள் இத்தகைய நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுதான் வருகின்றன. சட்டரீதியான முயற்சிகளால் நீதிமன்றங்கள் மூலம் சில தீர்வுகள் கிடைத்துள்ளன. எனினும், ஜனநாயக ரீதியான முழுமையான தீர்வை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தரும்.

7. சமீபத்தில் கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்த பா.ஜ.க., அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகுதான் அத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக தி.மு.க. உரிய பதிலை அளிக்கவில்லையே...மேலும் பிரசாரங்களிலும் இதனை எதிர்கொள்ளவில்லையே…

கச்சத்தீவு பிரச்னை பற்றி எழுப்பப்பட்ட மறுநாள் நடைபெற்ற வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்னையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிகக்கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அன்றைய பிரதமருக்குக் கலைஞர் எழுதிய கடிதங்களை வெளியிடச் சொல்லுங்கள். அவை அனைத்தும் கச்சத்தீவைத் தரக்கூடாது என்று சொல்லும் கடிதங்கள்தான். அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டுக் கச்சத்தீவை தரக்கூடாது என்று தீர்மானம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். சட்டமன்றத்திலேயே கச்சத்தீவை வழங்கக் கூடாது என்று தீர்மானம் போட்டார் முதலமைச்சர் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் 45 நகரங்களில் கண்டனக் கூட்டங்களைத் திமுக நடத்தியது. அப்போது நான் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினேன். இவை எதையும் தெரிந்து கொள்ள விரும்பாமல் கச்சத்தீவைப் பற்றி பேசுவது நாணயமற்ற அரசியல் ஆகும்.

இன்றைக்கு திடீரென்று கச்சத்தீவுக்காகக் கண்ணீர் விடும் பிரதமர் மோதி அவர்கள், 2014-ஆம் ஆண்டு அவர் பதவி ஏற்றது முதல் என்ன செய்தார்? கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? இலங்கைக்கு எத்தனையோ முறை போனார். அப்போதெல்லாம் கச்சத்தீவைத் திரும்பக் கொடுங்கள் என்று கேட்டாரா? இலங்கையின் பிரதமரும், ஜனாதிபதியும் எத்தனையோ முறை இந்தியாவுக்கு வந்தார்களே. அப்போதாவது அவர்களிடம் கேட்டாரா? இது எதையும் பத்தாண்டுகளாகச் செய்யாத பிரதமர் மோதிக்குக் கச்சத்தீவைப் பற்றி பேசத் தார்மீகத் தகுதி இல்லை.

'கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை' என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சொன்ன அரசுதான் பாஜக அரசு. மோதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீனவர்கள் மிகக் கடுமையாக இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதை ஏன் தட்டிக் கேட்க தைரியம் இல்லை என்று கன்னியாகுமரி, தூத்துக்குடி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நான் கேட்டேன். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள்.

இப்போது கூட கச்சத்தீவை மீட்டுத் தருவோம் என்று மோதி சொல்லவில்லை. இதுதான் அவரது தந்திரம் ஆகும். 31.3.2022 அன்று டெல்லி சென்ற நான் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மனு கொடுத்தேன். இரண்டு ஆண்டு காலத்தில் அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார் பிரதமர்? 26.5.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் அவரை மேடையில் வைத்துக் கொண்டே கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அதைக் கடிதமாகவும் கொடுத்தேன். இரண்டு ஆண்டு காலத்தில் அதற்காக அவர் எடுத்த முயற்சி என்ன?

8. சட்டமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று கூறி பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது அ.தி.மு.க., குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனை தி.மு.க. எப்படி எதிர்கொள்ளும்?

அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடத்தியது, என்னென்ன சொன்னது என்பதையும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறக்க மாட்டார்கள். தி.மு.க. அரசு எப்போதும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துணை நிற்கின்ற இயக்கம். அவர்களின் கோரிக்கைகள் பலவற்றைக் கேட்காமலேயே நிறைவேற்றிய அரசு.

அதேநேரத்தில், பழனிசாமி அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால்தான் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் தற்போதைய சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது. விரைவில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். இதுகுறித்து அவர்களிடமே நான் நேரில் உறுதி அளித்திருக்கிறேன்.

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளரா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் BBC தமிழுக்கு அளித்த நச் பேட்டி!

9. இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் எந்தெந்த விஷயங்களை மனதில் முன்னிறுத்தி வாக்களிப்பார்கள் எனக் கருதுகிறீர்கள்... இந்திய அளவில் என்னென்ன விஷயங்கள் முக்கியமானதாக இருக்கின்றன?

பத்து ஆண்டு காலமாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பாஜக ஆட்சி, தமிழ்நாட்டை வஞ்சித்ததை மனதில் வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள். திராவிட மாடல் அரசு மூன்றாண்டு காலத்தில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மனதில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியால் பட்ட துன்பங்கள்தான் முதன்மையானதாக இருக்கும். கேஸ் விலை, பெட்ரோல் -டீசல் விலை, ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு என நாடு முழுவதையும் துன்பப்பட வைத்துள்ள செயல்களை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகத்தைக் காத்திட வேண்டுமென்றால், இனியும் பா.ஜ.க. ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதே தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுமைக்குமான வாக்காளர்களின் மனநிலையாக இருக்கும். அதுவே அவர்கள் வாக்களிக்கும் போது எதிரொலிக்கும்.

10. கடந்த மூன்றாண்டு காலத்தில் நீங்கள் நினைத்த வகையில் ஆட்சியை நடத்த முடிந்திருக்கிறதா? இதைப்பற்றி உங்களுடைய மதிப்பீடு என்ன?

பல்வேறு சோதனைகள், நிதி நெருக்கடிகள், ஒன்றிய அரசின் புறக்கணிப்பு இவற்றைத் தாண்டி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆட்சியை நடத்தி வருவதில் எனக்கு மனநிறைவு உண்டு. இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம் போன்றவற்றால் திராவிட மாடலை மற்ற மாநிலங்கள் உற்று நோக்கிப் பின்பற்றத் தொடங்கியிருப்பதுதான் எங்கள் ஆட்சி மீதான மதிப்பீடு.

11. உங்கள் தேர்தல் அறிக்கையையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையையும் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?

மோதி அரசாங்கத்தின் மீது எதையெல்லாம் குறையாக நாங்கள் சொன்னோமோ அவை அனைத்தையும் களையும் அறிக்கையாகக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கிறது. மாநிலங்களை ஒழிக்கப் பார்க்கிறது மோதி அரசு. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தரப் போவதாகச் சொல்கிறது காங்கிரஸ் அறிக்கை. ஜிஎஸ்டியில் உள்ள குறைபாட்டை நீக்க இருக்கிறார்கள். மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வு கட்டாயமில்லை, மீண்டும் திட்டக்குழு, பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு, செஸ் வரி வசூலில் மாநில அரசுகள் ஏமாற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், இடஒதுக்கீடு - இப்படி பல்வேறு கருத்துகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இவை அனைத்தும் எங்களது கோரிக்கைகள் ஆகும். அதனால்தான் இதனைக் கொள்கைக் கூட்டணி என்கிறோம்.

கூட்டாட்சி இந்தியா என்பது திமுகவின் தேர்தல் அறிக்கை. அதற்கான உறுதியை வழங்கி இருக்கிறது காங்கிரஸ் அறிக்கை. கூட்டாட்சி இந்தியா அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறோம்.

12. இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துச்செல்லும் அளவுக்கு வலுவான வியூகங்கள் இல்லை என்ற தோற்றம் இருக்கிறது. பல தருணங்களில் பொருளாதார ரீதியாகச் சாத்தியமில்லாத விஷயங்களைச் சொல்வதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன..

எதை மனதில் வைத்து இதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. சரியான விஷயம் அனைத்தும் சாத்தியமான விஷயம்தான். மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று சொன்னோம். மக்களை ஏமாற்றுகிறது திமுக என்று அதிமுக பிரசாரம் செய்தது. இன்றைக்கு 1 கோடியே 15 லட்சம் மகளிர் பெறுகிறார்கள். போக்குவரத்துத் துறைக்கு வருமானம் என்பதே பயணக்கட்டணம்தான். மகளிர் அனைவர்க்கும் கட்டணமில்லை என்பது போக்குவரத்துத் துறைக்கு தனிப்பட்ட முறையில் இழப்புதான். ஆனால் அதனையும் செய்து காட்டினோம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

13. தமிழகத்தில் நிதி நெருக்கடி கடுமையாக இருக்கிறது. இம்மாதிரி நிலையில், புதிதாக அறிவித்துள்ள திட்டங்கள் எப்படி சாத்தியம்?

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கே விடியல் பிறக்கும். அப்போது தமிழ்நாட்டின் விடியல் இன்னும் வெளிச்சமாக இருக்கும். சொன்னதைச் செய்வோம் என்பதற்கேற்ப திட்டங்களைச் சாத்தியப்படுத்துவோம். தமிழ்நாட்டை வளப்படுத்த முடியாத அளவுக்கு இடைஞ்சலாக இருக்கும் மோதி அரசை அகற்றினாலே அனைத்தும் சாத்தியம்தான்.

14. தேர்தலில் போட்டியிட தி.மு.கவின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு போதுமான இடம் அளிக்கப்படவில்லை என்ற குறை இருக்கிறதே?

தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் இணைந்த இந்தியா கூட்டணி என்பதே அனைத்துச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்கான கூட்டணிதான். இருக்கின்ற தொகுதிகளுக்கேற்ப அவரவருக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு,

ஒருங்கிணைந்து தேர்தல் களத்தைச் சந்திக்கிறோம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்த பயணம் இது. வெற்றிதான் எங்கள் இலக்கு.

- நன்றி BBC தமிழ்

Related Stories

Related Stories