தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து சோளிங்கர் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய கல்லை நான் காண்பித்தேன். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றிப் பேச வேண்டும் என்கிறார். நானாவது கல்லைத்தான் காண்பித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்தார்.
உங்களைப் போன்று நேரத்திற்குத் தகுந்தாற்போல் ஆட்களுக்குத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்துப் பேசுபவன் நான் அல்ல. தமிழ்நாட்டிற்கான மாநில உரிமைகளை அடகுவைத்த கூட்டம்தான் அதிமுக கூட்டம். மோடி 10 நாள் அல்ல எத்தனை நாள் சுற்றி வந்தாலும், தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் பா.ஜ.கவால் ஜெயிக்க முடியாது.
ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாகக் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்குத் திருப்பி தருகிறார்கள். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா என்று பிரதமர் மோடிக்கு புதிய பெயர் வைத்துள்ளேன். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி எனும் ஆக்சிஜனை நிறுத்தி, வளர்ச்சியைத் தடுக்கும் ஜனநாயக விரோதிகளை வீட்டுக்கு அனுப்பிட நம் சமூகநீதி மண்ணிலிருந்து உறுதி ஏற்போம். பாசிச பா.ஜ.கவிற்கு பாடம் புகட்டக்கூடிய தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.