இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், காங்கிரஸ் என்ற கட்சிக்கு மாற்று என்ற பேச்சிற்கே இடமில்லை என்று இருந்தது.
எனினும், அச்சூழல் காலப்போக்கில் மாறி, பல மாநில கட்சிகள் உருவாகின. அவ்வாறு உருவாகிய கட்சிகளில் சில கட்சிகள் தங்களை தேசிய கட்சிகளாக மாற்றிக்கொண்டன.
ஆட்சியையும் கைப்பற்றின. அவ்வகையில், உருவான திராவிட முன்னேற்ற கழகம், மாநில கட்சியாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் உந்துதலாகவும் விளங்கி வரும் நிலையில், தி.மு.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமையையும், தமிழின் பெருமையையுமே முக்கிய குறிக்கோளாக கொண்ட தி.மு.க, தேசிய கட்சியாக உயர தகுதி பெற்றிடினும், அது தன்னை மாநில கட்சியாகவே தக்கவைத்து கொண்டது.
எனினும், தி.மு.க என்றால் தேசிய கட்சிகளும் சரி, சங் பரிவார்களும் சரி, அச்சப்படுகிறார்கள் என்றால், அது தி.மு.க.வின் துணிவும், கருத்தியலில் ஏற்படாத மாற்றமும் தான்.
இந்நிலையில், இந்தியா என்ற நாட்டையே ஒற்றை அதிகாரத்திற்குள் அடக்கி வைக்க, பா.ஜ.க என்கிற மதவாத, பாசிச கட்சி பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அவ்வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மண்ணான தமிழ்நாட்டையும் கைப்பற்ற, தனது வழக்கமான உத்தியை கையாள முயன்று வருகிறது பா.ஜ.க.
ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்பின் உந்துதலில், 1980-ல் தொடங்கப்பட்ட பா.ஜ.க, ஒவ்வொரு மாநிலமாக சென்று, இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் சேருவது போல நாடகமாடி, பின்பு அந்த இரண்டாவது பெரிய கட்சி இடத்திற்கு தங்களை நிலைநிறுத்திக் கொண்டு , பின்பு ஆளும் கட்சியையும் மக்களுக்கு எதிராக மாற்றுவதே, அதன் வழக்கமான உத்தியாக இருப்பது பலரும் அறிந்ததே.
அந்த உத்தியை, தமிழ்நாட்டிலும் செயல்படுத்தவே, முன்பு பா.ஜ.க.வினரால் விமர்சிக்கப்பட்ட அ.தி.மு.க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போது மோடியால் புகழப்பட்டு வருகிறார்.
பா.ஜ.க.வின் வேட்பாளர்கள், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்-ன் பெயர்களை கூறி வாக்கு கேப்போம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கிற பிளவும், பா.ஜ.க.விற்கு கூடுதல் வலுவாக மாறியிருக்கிறது.
எனினும், பா.ஜ.க.வின் வெற்றி பாதைக்கு ஒற்றை அச்சுறுத்தலாகவும், பா.ஜ.க.வின் குதர்க்கத்தனத்திற்கு தடையாகவும், தி.மு.க தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டின் அசைக்க முடியாத வலிமையாக திகழ்ந்து வருவது பா.ஜ.க.வின் திட்டத்தில், கரியை பூசுவதாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், இருக்கின்ற வலிமை போதாதென்று, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தவறவிட்ட ஒரு தொகுதியையும், இந்த தேர்தலில் கைப்பற்ற, தி.மு.க.வின் தலைமைகள் இடையுறாத பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதால், தோல்வி பயத்தில், பா.ஜ.க.வின் தலைவர்கள் குட்டிக்கரணம் அடித்து வருகின்றனர்.