தமிழ்நாடு

”விளையாட்டுத் துறையில் எழுச்சி பெரும் தமிழ்நாடு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு எழுச்சி பெற்று வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”விளையாட்டுத் துறையில் எழுச்சி பெரும் தமிழ்நாடு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி- 2023 வருகிற ஜனவரி 19 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சார வாகனத்தின் அறிமுக விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான பிரச்சார வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகு விளையாட்டுத்துறை பெரும் எழுச்சி பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையிலும் ஒன்றிய அரசுக்கு வழிகாட்டியாக உள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி- 2023 நடத்த உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை எப்படி மிகச் சிறப்பாக நடத்தி காட்டினோமா அதுபோல இந்த போட்டியையும் நாம் நடத்த உள்ளோம்.

கோலோ இந்தியா போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டினை பெருமைப்படுத்தக் கூடிய வகையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் பேரையும் கொண்டு வீரமங்கை என்கின்ற பெயரில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இப்படிச் சிறப்பு மிக்க போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது மட்டுமல்லாது, நமது வீரர்களின் வெற்றி பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இனியும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான பிரச்சார வாகனம் மதுரை, திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் என வகைப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஜன. 8 ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 12 நாட்களுக்குப் பிரச்சாரம் செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாகனம் செல்லும் பகுதிகளில் மினி மாரத்தான் போட்டிகள், வேலுநாச்சியார் குறித்தான பேச்சு போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா 2023 லட்சணை வரையும் ஓவியப் போட்டி என அனைத்தும் நடைபெற உள்ளன.

banner

Related Stories

Related Stories