முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 7, 8 ஆகிய 2 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்கிறது. தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைவதால் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடிக்கு VinFast நிறுவனம் முதலீடு செய்துள்ளதை அடுத்து தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast
நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்" என தெரிவித்துள்ளார்.