இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள் - பரிமளா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், 2-வது மகனான ராகவேந்திரா (13) என்பவர் அந்த பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 18 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ராகவேந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ராகவேந்திரா நேற்று மூளைச்சாவடைந்தார். இதில் கதறி அழுத பெற்றோர், தனது மகனின் உடல் உறுப்புகளை தாமாகவே முன்வந்து மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் இன்று இறுதி நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள், உற்றார் உறவினர் என அனைவரும் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு அரசின் ஆணையின்படி அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று சிறுவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது
மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு, உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்களை கூப்பி தலை வணங்கி கண்ணீர் வீட்டு அவர்களின் செயலை வெகுவாக பாராட்டினார்
ஆற்காடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரிடம் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் வீட்டு அமைச்சர் ஆர் காந்தி பாராட்டிய சம்பவம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைவரின் மத்தியிலும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியது..