சென்னையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு - “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் ” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியது பின்வருமாறு :
"பத்திரப்பதிவுத்துறை சார்பில் நடைபெறும், நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்கான தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஆலோசனை மற்றும் ஸ்டார் 3.0 கூட்டு பட்டறை” நிகழ்வுக்கு வருகை புரிந்திருக்கும் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜோதிநிர்மலா சாமி, ஐ.ஏ.எஸ் அவர்களையும், பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ் அவர்களையும், கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளயும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.
பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் 6.2.2000 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளுடன் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
பொது மக்களே இணையதளம் மூலம் ஆவணம் உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விற்பவர், வாங்குபவர் மற்றும் சொத்து விவரத்தை உள்ளீடு செய்தால் இணையதளமே சம்பந்தப்பட்ட ஆவணத்தை உருவாக்கி தந்துவிடும்.
▪ வரிசைக்கிரமமான பாகுபாடற்ற சீரான பதிவிற்காக உரிய சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்து ஆவணப்பதிவு மற்றும் திருமணப்பதிவிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
▪ தாலுகா அலுவலகங்களுக்கு இணையவழி பட்டா மாற்ற விவரங்கள் அனுப்பிடுதல் மற்றும் இவ்விவரத்தினை குறுஞ்செய்தி மூலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ஒப்புகையுடன் ஆவணதாரருக்கு அனுப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
▪ அனைத்து வங்கிகள் மூலம் கட்டணங்கள் செலுத்திடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையவங்கி, பற்று அட்டை, கடன் அட்டை, ஒருங்கிணைந்த கட்டண முகப்பு (UPI), நிகழ் நேரத்தில் மொத்த தொகை தீர்வு செய்தல் (RTGS), தேசீய மின் நிதி பரிவர்த்தனை (NEFT) ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
▪ வில்லங்கச்சான்றுகள் 1975 ஆண்டு முதல் இணையவழியாக கட்டணமின்றி தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியினை தினந்தோறும் சுமார் 70,000 சான்றுகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
▪ இலக்க கையொப்பமிட்ட மற்றும் விரைவு குறியீடிட்ட வில்லங்கச்சான்றுகள் மற்றும் சான்றிட்ட நகல்கள் கணினிமயமாக்கப்பட்ட காலகட்டத்திற்கு இணையவழி விண்ணப்பித்து, இணையவழி கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்பவர்களின் உள்நுழைவுவழி பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் வில்லங்கச்சான்றுகள் மற்றும் சான்றிட்டநகல்கள் பெறுவதற்காக அலுவலகம் செல்வது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
▪ கட்டணமில்லா தொலைபேசிஎண் 1800-102-5174 மூலம் மக்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடுவதற்கும் வழை வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து பத்திரப்பதிவுதுறையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி அரசின் வருவாயை பெருக்குவதில் முன்னோடித் துறையாக மாற்றியுள்ளது. நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பதிவுத்துறையை நவீன மயமாக்குவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
கீழே கண்ட புதிய வசதிகளை பொதுமக்கள் வசதிக்காக ஸ்டார் 2.0 மென்பொருளில் இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது.
• உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, கடனை திரும்பி அளித்தற்கான இரசீது ஆவணம், குடியிருப்பு வாடகை ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களை ஆன்லைன் வழி பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• ஆவணப்பதிவின்போது ஆவணத்தை எழுதி கொடுப்பவர்/ எழுதி வாங்குபவரது விரல் ரேகை எடுக்கப்படுகிறது. இந்த விரல் ரேகையை நிகழ் நேரத்தில் ஆதார் தரவுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதால் ஆள்மாறாட்டம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
• பொதுமக்கள் ஆவணப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்வாரியம் (TANGEDCO), சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் (CMWSBB) ஆகிய துறைகளில் பெயர் மாற்ற விண்ணப்பம் அளிக்கும் நடைமுறையை மாற்றி ஆவண விபரங்களை உள்ளீடு செய்யும் போதே மேற்படி துறைகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான விபரங்களை பெற்று ஆவணப்பதிவு நிறைவடைந்தவுடன் அனுப்பி வைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
• தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த கிறித்தவ மக்கள் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்திற்கு வந்து திருமண வடிப்புகளை வாங்க வேண்டிய நிலையை மாற்றி துணைப்பதிவுத்துறைத்தலைவர் அலுவலகங்கம் மற்றும் ஆன்லைன் வழி பெற்றுக்கொள்ளும் வண்ணம் மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
• மூத்த குடிமக்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
• அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களுக்கு தட்கல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை மேலும் எளிமையாக்கும் விதமாக 'ஸ்டார் 3.0' என்னும் புதிய மென்பொருள் உருவாக்க இந்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஸ்டார் 3.0 திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக கீழ்க்கண்டவற்றை கூறலாம்..
1. செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல்
2. மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல்
3. பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல்
4. தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல்
5. மென்பொருளை அதிவேகமாக இயங்கவைத்தல்
6. அனைத்து நிலைகளிலும் புதிய வன்பொருள் வழங்குதல்
7. கிளவுட் தொழில் நுட்பம்
8. கைபேசி செயலி
பத்திரப்பதிவுத்துறை சார்பில் நடைபெறும் ஸ்டார் 3.0 கூட்டு பட்டறைக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து நிறுவனப்பிரதிநிதிகளும் தங்களின் மேலான கருத்துக்களையும் தங்கள் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு ஸ்டார் 3.0 திட்டத்திற்கு வழங்கி மெருகேற்றலாம் என்பதை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டிலேயே நவீன தொழில் நுட்பத்தில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழும் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் திகழச்செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அவர்களின் சீரிய தலைமையின் கீழ் இயங்கும் அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."