அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட வர்தக மையத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 8,844 பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 972 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவில் எங்கும் அறிவிக்கப்படாத திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்தனை நபர்களுக்கான ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 2,40,000 மகளிர் பயன்பெற்று உள்ளனர். நான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளி என்பதை நீங்கள் கம்பீரமாக சொல்லலாம்.
நீங்கள் யாரை நம்பியும் இனி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை எந்த ஒரு தகுதி வாய்ந்த பெண்களும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக தான் தற்போது மேல்முறையீடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்தாக கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.
பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேற்றம் அடைய இது பயனுள்ளதாக இருந்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தார். பொருளாதார ரீதியில் பெண்களுக்கான முட்டுக்கட்டை என்னென்ன என்று ஆலோசனை செய்து ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் உதித்தது தான் புதுமைப்பெண் திட்டம்.
31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாகும். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்பதை ஒரு அண்ணனாக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். கலாச்சார ரீதியாக பெண்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது, பெண்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது. கீழ் ஜாதி மேல் ஜாதி என பாகுபாடு பார்க்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தனர். அதையும் பெரியார் அவர்கள் உடைத்தெறிந்தார். தற்போது திராவிட மாடலா ஆட்சி கலாச்சார ரீதியிலும் பெண்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்துள்ளது .
பெண்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்திட வேண்டும் என்று முழுமூச்சாக தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சி எடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறார். இப்போது உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மேயர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், என இப்படி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பகுத்தறிவோடும் முற்போக்கோடும் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் அதற்கு பெண்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் முற்போக்காக சுதந்திரமாக செயல்படுவார்கள். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறி வளர்வதும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமையை சேர்க்கும் . கழக அரசின் சாதனைகளை தூதுவராக பெண்கள் அனைவரும் செயல்பட்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.