காவிரியில் கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறந்து விடாத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு தண்ணீரைப் பெற்று வருகிறது. அண்மையில் கர்நாடகாவில் மழை இல்லாதா காரணத்தால் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வந்த நீரை கர்நாடக அரசு நிறுத்தியது.
பின்னர் உடனே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப் படி ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் , காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இந்நிலையில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாகப் போலியான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள் இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாகச் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம்" என தெரிவித்துள்ளார்.