தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொழில் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும், ஜப்பான் நாட்டுக்கும் பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு தொழில் முதலீட்டாளர்களுக்கான மாநாடும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாராகும் மின்னணு வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதி வரை நாடுமுழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 10 லட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 14 ஆயிரத்து 802 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளது.
மேலும், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஐந்து நகரங்களை மின்சார வாகனங்கள் மையங்களாக உருவாக்குவதற்காக ஜனவரி மாதம் தமிழ்நாடு தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதன் படி 2025 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகன உற்பத்தியில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1.50 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களில் 30% உற்பத்தி செய்து, உலகளாவிய ஏற்றுமதியில் கணிசமான பங்களிப்பைத் தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 1,12,949 மின்சார வாகனங்களையும், ஏதர் எனர்ஜி நிறுவனம் 77,764 வாகனங்களையும், ஆம்பியர் நிறுவனம் 41,757 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.