பேரறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார். பிறகு அங்கிருந்த குறிப்பேட்டில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என எழுதி கையெபத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் 1.06 கோடி மகளிர் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்தியாவை மீட்கம் வேட்கைத் தீ பரவட்டும் நாடெங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்!
தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்! எண்ணித்துணிவோம்! இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ பரவட்டும் நாடெங்கும்!" என தெரிவித்துள்ளார்.