தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் தொடங்கி வைத்தனர். இதன்படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு ATM Card அட்டையை வழங்கி தொடங்கிவைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருந்த மாபெரும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்காக அமைய உள்ளது. உங்களுடைய பெண்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டு வெறும் அட்டை மட்டும் அல்ல. உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்பு சீட்டு.
பெண்கள் முன்னேற்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல் வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞர் வழியில் நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம் தி.மு.க.
பொருளாதாரத்தில் ஆண்களைச் சார்ந்து பெண்கள் இருக்கும் நிலை உள்ளதால், அவர்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்வியில் பெண்களுக்கு ஊக்கத் தொகை, சுய தொழில் தொடங்குவதற்கு நிதி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.” என தெரிவித்துள்ளார்.