தமிழ்நாடு

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா ராசேந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“அன்புச் சகோதரர் சபா. ராசேந்திரன் அவர்கள் தன்னுடைய மகன் திருமணத்தை நடத்தி வைக்க நான் நெய்வேலிக்கு வர வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே என்னிடம் தேதி வாங்கி மிகப் பெரிய ஏற்பாடுகளை செய்து வந்தார்.

ஆனாலும், நெய்வேலிக்கு நேரில் வர இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. ஜி-20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அவர்களது அழைப்பின் பேரில், நேற்று டெல்லி சென்றுவிட்டேன். இந்தச் செய்தியை சபா. ராசேந்திரன் அவர்களுக்கு நான் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு, ”நீங்க போய்விட்டு வாங்கண்ணா” என்று பாசத்தோடு சொன்னார்.

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சபா. ராசேந்திரன் அவர்களின் குடும்பமும் என் குடும்பம்தான். அதனாலதான், எனக்குப் பதிலாக, நம்முடைய இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் தம்பி உதயநிதி கலந்து கொள்வார் என்று அவரிடம் சொன்னேன். டெல்லியில் இருந்தாலும், என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நெய்வேலியில்தான் இருக்கிறது. சபா. இராசேந்திரன் குடும்பம் என்பது வாழையடி வாழையாக கழகக் குடும்பமாக இருந்து வருகின்ற குடும்பம்.

இனியும் அப்படித்தான் தொடரப் போகிறது. நமது சபா. ராசேந்திரன் அவர்களது தந்தை சபாபதி மூன்று முறை சொரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். நமது சபா.ராசேந்திரன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றி வருகிறார். கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே கழகப் பணியாற்றுவதில் ஈடுபாடு கொண்டவர் சபா. ராசேந்திரன்.

1996-ஆம் ஆண்டு சொரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்- 2003-ஆம் ஆண்டு பண்ருட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்- 2006-ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் - இப்படி படிப்படியாக உயர்ந்தவர். நான்கு முறை போட்டியிட்டு -மூன்று முறை வென்றவர் என்பதை வைத்தே மக்களிடம் அவருக்கு இருக்கின்ற செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம்.

தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தை – துணை முதலமைச்சராக இருந்தபோது நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, தனது சொந்த நிதியில், காசாம்பு ஏரியை தூர்வாறினார். அதை நேரில் சென்று நான் பார்வையிட்டது இப்போதும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

இப்போது 2021-ல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு – காடாம்புலியூர் சிட்கோ சிறு தொழில் வளாகம் கட்டப்பட்டு, மூன்று மாதம் முன்பு தான் திறந்து வைத்தேன். நெய்வேலியில் நகர்ப்புற திட்டத்தின்கீழ் 840 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான திட்டங்களை தன்னுடைய தொகுதிக்கு கொண்டு வர வேண்டும், மக்கள் தேவைகளை தீர்க்க வேண்டும் என்று முனைப்பாக இருக்ககூடியவர் தான் ராசேந்திரன். நெய்வேலி நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிப்பவராகவும் ராசேந்திரன் செயல்பட்டு வருகிறார்.

இதை எல்லாம் பார்க்கும்போது, சபா ராசேந்திரனை - சபாஷ் ராசேந்திரன் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் சபா ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சபா. ராசேந்திரன் - அங்கயற்கண்ணி இணையரின் அன்பு மகனான சபா. இரா. சுமந்த் B.E., அவர்களும், சாரங்கபாணி – செல்வராணி இணையரின் அன்பு மகள் சா. தனரஞ்சனி B.Tech., அவர்களும் – வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெற்று – அனைத்து உயர்வுகளையும் அடைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துறேன்.

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.

ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.

நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.

ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.

நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற முழக்கத்துடன் விடை பெறுகிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories