தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலைபண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள். திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல்பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திரு கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது.
திருக்கோயில்களில் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி 12 குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாததிருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 7,142 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 திருக்கோயில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அனைத்து தரப்பினரும் போற்றிடும் வகையில் செயலாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000 - வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ சீதனச்சேரியில் உள்ள 300 ஆண்டு பழமையான கோவிலை குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் 150 ஆண்டு பழமையான கோவிலுக்கு திருப்பணி நடைபெறாமல் இருந்த கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்கிறது.
அதேபோல, தமிழகத்தில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதிகளில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுடன் ரூபாய் ஒரு லட்சம் அந்தத் திருப்பணிகளுக்காக அரசின் சார்பாக இந்து அறநிலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட நிதியை இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தியது.
10 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களுக்கு மட்டும்தான் திருப்பணிகள் அ.தி.மு.க நடத்தி இருந்தார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தி கொடுத்து ஆயிரம் திருக்கோயில்களை 1250 ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கின்ற கோவில்களும் கிராமப்புறத்தில் இருக்கின்ற திருக்கோவில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தி இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “"எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.