தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.08.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை:
நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு. 2007-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.
"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 327 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் முதல்முறையாக துவங்கப்பட்டது.
இந்த வரலாற்றின் நீட்சியாக நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, செய்து வரும் சில திட்டங்களை மட்டும் இங்கே நான் ஒன்றிரண்டு மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு, புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டுள்ளோம்.
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், 14 இலட்சம் ரூபாய் செலவில் “செம்மொழி நூலகங்கள்" ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, 5 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2021-2022ஆம் ஆண்டு முதல் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 3 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயலாற்றிடும்" என தெரிவித்துள்ளார்.