தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.08.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை:
எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய வகையில் என்னை இயக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார் என்று கேட்டால், மாணவர்களும், இளைஞர்களும்தான். எனவே, அப்படிப்பட்ட மாணவ மாணவியர்கள் நிரம்பியிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், உங்களிடையே இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
"தலை நிமிரும் தமிழகம்" என்ற என்னுடைய தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கத்தை, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். அந்த அடிப்படையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தைச் சார்ந்த சகோதரர்கள், நிர்வாகிகள் இந்தப் பேச்சுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி, அதில் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியிருக்கிறோம்.
ஆனால், என்னைக் கேட்டால், இந்த பேச்சுப் போட்டிகளின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம் பேச்சாளர்களைத்தான். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெரும் பரிசு என்றுதான் நான் சொல்லுவேன்!
ஏனென்றால் பேச்சுக்கலை என்பது எல்லோருக்கும் எளிய வகையில் வந்துவிட முடியாது. மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, அதற்கென ரசிகர்களை ஈர்த்தவர்கள் எத்தனையோ பேர். நம் தமிழ் மண்ணில் இருந்தார்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
பேச்சாற்றலால் நம் தமிழ் நிலம் பண்படுத்தப்பட்ட வரலாற்றை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். அதனை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். டி.எம்.நாயர் அவர்களின் ‘ஸ்பர்டாங்க்' உரைபோல், உங்களது உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருந்துவிட வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம்; திராவிட இயக்கம் என்பதே எழுதி எழுதி வளர்ந்திருக்கக்கூடிய இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டங்களை 'மாலை நேரக் கல்லூரிகள்' என்று அழைப்பதுண்டு. அந்தளவிற்கு அறிவாற்றல், சொல்லாற்றல் அதில் அடங்கியிருக்கும். பகுத்தறிவுக் கருத்துகளை பட்டெனச் சொல்லும் நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், அவர் இந்த சமுதாயத்திற்காக என்னென்ன கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மூலமாக நாம் அறிந்து கொண்டாகவேண்டும். அதேபோல், உலக அரசியலையெல்லாம் தன் மயக்கும் மொழியாலேயே சொல்லி அறிவூட்டியவர் யார் என்றால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அடுக்குமொழியிலும் கனல் தெறிக்கக்கூடிய வசனங்கள் பேசி தமிழர்களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர் யார் என்றால், இன்றைக்கு நூற்றாண்டு விழா காணக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இப்படி அவர்களை எல்லாம் வழிகாட்டிகளாகக் கொண்டு நம்முடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
“அஞ்சாநெஞ்சன்” பட்டுக்கோட்டை அழகிரி - “டார்ப்பீடோ” ஏ.பி.ஜனார்த்தனம் “சிந்தனைச் சிற்பி" சி.பி.சிற்றரசு “நடமாடும் பல்கலைக்கழகம்” நாவலர் நெடுஞ்செழியன் “சொல்லின் செல்வர்” ஈ.வெ.கி.சம்பத் - நம்முடைய இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள். இவர்களெல்லாம் இனமான உணர்வூட்டிய பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள். அது நீளமாக இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி வரலாறு போற்றும் பேச்சாளர்களை உருவாக்கித் தரும் களமாக, இந்த போட்டியைச் மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், அந்தப் பணியை சிறப்போடு செய்து காட்டியிருக்கிறார்கள். அதேபோல, நம்முடைய மதிப்பிற்குரிய தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் என்னுடைய பெருமதிப்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படி இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, ஊக்குவிக்கும் அந்தப் பணியை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான் நினைத்துப் பார்க்கிறேன், இப்போது மட்டும் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து இந்தக் காட்சியை பார்த்திருந்தால் அவரைவிட மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது. நாமெல்லாம், ஆற்றலோடு அல்ல, ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணம் எத்தனையோ பேர் இருக்கலாம் அதில் முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் தான். சட்டமன்றத்தில், அதேபோல மக்கள் மன்றத்தில் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் நான் கேட்பதுண்டு. அவரே பலமுறை என்னிடத்தில் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அமைதியாக உட்கார்ந்துகொண்டு இருக்கக்கூடாது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சரி, சட்டமன்றத்தில் அப்போதைக்கப்போது எழுந்து சில கேள்வியை கேட்கவேண்டும். எனக்கு இப்படிப்பட்ட பல அறிவுரைகளை ஆலோசனைகளை எல்லாம் வழங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
எனவே தலைவர் கலைஞருடைய இதயத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றவராக விளங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். அதே அன்போடும், அதே நட்புணர்வோடு இன்றைக்கு அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடத்திலும் அந்த அன்பை பெற்று வைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோல, செஞ்சி மஸ்தான் அவர்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக அவர் ஆற்றி வரும் பணிகளையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு.
2007-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.
"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 327 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் முதல்முறையாக துவங்கப்பட்டது.
இந்த வரலாற்றின் நீட்சியாக நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, செய்து வரும் சில திட்டங்களை மட்டும் இங்கே நான் ஒன்றிரண்டு மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு, புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டுள்ளோம்.
14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், 14 இலட்சம் ரூபாய் செலவில் “செம்மொழி நூலகங்கள்" ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, 5 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2021-2022ஆம் ஆண்டு முதல் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 3 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து
செயலாற்றிடும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அதேநேரத்தில் மாணவர்களிடம் நான் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு.
சமத்துவம் - சகோதரத்துவம் - சமூகநீதி சுயமரியாதை பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டைக் கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதநேயத்தைப் போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களைப் புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் கேட்டு, இந்த சிறப்பான வாய்ப்பைப் பெற்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்ல சூழல் ஏற்படுத்தித் தந்த நம்முடைய அன்பிற்குரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், ஆணையத்தினுடைய தலைவர் என்னுடைய அன்பிற்கினிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து பரிசு பெற்றிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களை மனமார வாழ்த்தி, பாராட்டி விடைபெறுகிறேன்.