நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனுக்கும் அதே பள்ளியில் படித்து வரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை, சாதிய ரீதியான பிரச்சனையாக மாறியுள்ளது.
நாங்குநேரி பகுதியில் உள்ள பட்டியலின மாணவரின் வீட்டிற்குள் புகுந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமரியாக வெட்டிய சம்பவத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது" என கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனைச் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். அப்போது தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல் நலம் விசாரித்தார். மேலும் அவரது தயார் அம்பிகாபதியிடம் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தார். அப்போதுசின்னத்துரையின் தாயார் அம்பிகாபதியிடம் பேசிய முதலமைச்சர், “ எதற்கு கவலைபடாதீங்க அரசு உங்களுடம் இருக்கும்”என நம்பிக்கை அளித்தார்.
இந்நிலையில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவன் சின்னதுரைக்கு நல்ல முறையில் மருத்துவச் சிகிச்சை அளித்து வரும் அரசுக்கு நன்றி. பள்ளிகளில் சாதிய மதவாத நச்சு கருத்துக்கள் பரப்பப்படுகிறது. RSS போன்ற அமைப்பினர் பள்ளிகளில் மதவாத உணர்வுகளைப் புகுத்த பார்க்கின்றனர். ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்வது, காவி துணி வழங்குவதும் போன்ற சம்பவங்கள் நடக்கிறது" என தெரிவித்துள்ளார்.