தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி #DMKfiles என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என அவதூறு தகவலை தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க நிர்வாகிகள் அண்ணமாலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், 500 கோடி,100 கோடி, 5 கோடி ,1 கோடி என நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது; சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார்.
அதனைத்தொடந்து தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை 17, ஆவது குற்றவியல் நீதிமன்றம் மாஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜராகினார். வழக்கு தொடர்பான விபரங்கள் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்டு மேலும் இது தொடர்பான 24.08.2023 அன்று, விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.