2024 மக்களவைத் தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்பது தொடர்பான, எதிர்க்கட்சித் தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. இதில், நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 38 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62 சதவிகித வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன.
எனவே, 2024-இல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில், பாஜக-வுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்றவர்கள் கூறியிருந்தனர்.
அதனடிப்படையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை முறியடிக்கும் வகையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் ஆராய்வது பற்றியும், பாஜக-வை முறியடிப்பதற்கான திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கவும் ஜூன் 23 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக ஜூன் 12-இல் இக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முக்கியமான தலைவர்கள் சிலர் அன்றைய நாளில் கூட்டத்திற்கு வர முடி யாத நிலையில், தேதி மாற்றம் செய்யப் பட்டது. அதன்படி, பாஜக-வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ராஜூ ரஞ்சன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பீகார் மாநிலம் பாட்னா சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் சென்று வரவேற்றார். மேலும் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாட்னா வந்தடைந்தேன். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி மற்றும் பீகார் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இதமான வரவேற்பைப் பெற்றேன்.
ஆசிய சோதி புத்தர், மக்கள் நாயகர் கர்ப்பூரி தாக்கூர், திரு. B.P. மண்டல் ஆகியோரை நமக்களித்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பாசிச - எதேச்சாதிகார ஒன்றிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மீண்டும் மலர, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் இத்தகைய சமூகநீதி மண்ணில் இருந்து எழத் தொடங்குவதில் எந்த வியப்பும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.