தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார் என வள்ளார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார். சங்கியாக, சண்டித்தனம் செய்து வருகிறார்!
வள்ளலாருக்கு இப்போது ஜெயந்தியாம்! எது நுழைகிறது பார்த்தீர்களா? வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத் தாளர் என்ற முழுப் பொய் புரட்டை முன்னால் நிறுத்திப் பேசி வம்பளக்கிறார்!
‘மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும்...’
‘’நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே’’
‘’வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்க விலை
என்ன பயனோ இவை.’’
‘’கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக...
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றுங்கொண்டறியர் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்’
வேதநெறி ஆகமத்தின் நெறியபு ராணங்கள்
விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே சித்தமே’’
என்று ஆறாம் திருமுறையில் ஒப்புதல் வாக்குமூலம் போல், தனது முந்தைய கருத்துகளுக்கெல்லாம் விடை கொடுத்து விடுதலை கண்ட வித்தகரை சனாதனச் சழக்கராகக் காட்டி, வெள்ளை அணிந்த எம் வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் - பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என். ரவியின் தில்லுமுல்லுப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
“யானையைத் தடவிப் பார்த்து வர்ணனை கூறிய அய்வர்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நாடு தழுவிய கண்டனம் வெடிக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.