அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், அவருக்கு உணவு கூட கொடுக்காமல் சுமார் 18 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் குடும்ப உறுப்பினர்களை கூட காணவிடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சு வலி வந்தது.
நெஞ்சு வலியில் துடிதுடித்த அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது இதயத்தில் 3 குழாய்களில் அடைப்பு உள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த நிலைக்கு காரணமான அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இழைத்த கொடுமைகள் விவகாரம் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையம் களமிறங்கியுள்ளது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேசுகையில், "நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியையும், அந்த கைது செய்யும் பொழுது மனித உரிமைகள் மீறல் இருப்பதாகவும் புகார் வந்தது அதன் அடிப்படையில் தற்போது விசாரணை செய்வதற்காக வருகை தந்தோம்.
அவர் சிகிச்சை பெரும் அறைக்கு சென்று அவரைப் பார்த்தோம், அவர் மிகவும் சோர்வாக இருந்தார். இருப்பினும் காத்திருந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களிடம் சில கருத்துகளை தெரிவித்தார் அதில், தான் கைது செய்யும் பொழுது கடுமையாக நடத்தப்பட்டதாகவும் தரதரவென்று இழுத்து தரையில் போட்டதால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நெஞ்சு வலியால் தொடர்ந்து பேச முடியவில்லை என்று தெரிவித்தார் அது மட்டும் இன்றி தனக்கு துன்பம் கொடுத்த அதிகாரிகளின் பெயரையும் அவர் தெரிவித்தார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், கீழே தள்ளி அமலாக்கத்துறையினர் தன்னை துன்புறுத்தியதாகவும், செந்தில் பாலாஜி தெரிவித்தார். தற்போது தரப்பட்ட புகாரிலும் ஏற்கனவே பெறப்பட்ட புகாரிலும் அடிப்படையில் நாளை விசாரணை மேற்கொள்ளப்படும்." என்றார்.