தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .
சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரை கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.
முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு மேலும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. இந்த நிலையில், அமைச்சர் செல்லும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கதறி துடித்த அமைச்சரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. இதனால் மூன்று இடங்களில் இருந்த பிரதான அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. மேலும் அந்த அடைப்புகளை நீக்க ஸ்டன்ட் வைக்க வேண்டும் அல்லது ஓபன் ஹார்ட் சார்ஜரி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
இப்படி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உயிருக்கே ஆப்பதை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.