தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாகச் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .
சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரைக் கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.
பின்னர் முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அறிந்த உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசமுடியாத நிலையிலிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவ கண்காணிப்பிலிருந்து வருகிறார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த கொடுமைகள் மற்றும் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் மனவேதனையுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கேள்வி : அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்த்து?
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்: அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை ஊடகங்களில் பார்த்து அவர் மிகுந்த ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அவர் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு எந்தவித உதவியும் கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அமலாக்கத்துறையினர் செய்து கொண்டு இருந்தனர். இருந்தாலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதனை செய்தபோது, அமைச்சருக்கு இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை இயல்புக்கு மாறாக இருப்பதை கண்டறிந்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளில் ஒருவர், தானும் ஒருவர் மருத்துவர் தான் என்று கூறி, அமைச்சரின் உடல்நிலை இயல்புக்கு மாறாக இருப்பதை உறுதிசெய்து, தொடர்ந்து சிகிச்சைப் அளிக்க வலியுறுத்தினார்.
இருந்தாலும் பிற அமலாக்கத்துறை அதிகாரிகள் எப்படியாவது அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருந்தனர். இதையடுத்து காலை 8.30 மணியளவில் இருதயவியல் சிறப்பு மருத்துவர் வருகை தந்து ஆய்வு செய்த நிலையில் அடைப்புகள் இருப்பதை உறுதி செய்தார். உடனே அவரது பரிந்துரையின்படி ஆஞ்சியோ செய்யப்பட்டது. இதனால் மூன்று இடங்களில் இருந்த பிரதான அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. மேலும் அந்த அடைப்புகளை நீக்க ஸ்டன்ட் வைக்க வேண்டும் அல்லது ஓபன் ஹார்ட் சார்ஜரி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார். எனவே செகண்ட் ஒப்பீனியன் கேட்க வேண்டும் என்கிற நிலையில், அப்பல்லோ மருத்துவர் செங்குட்டுவேல் என்பவரை வரவழைத்து கேட்கப்பட்டது. அவரும் பரிசோதனை செய்து அமைச்சரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அடைப்புகளை சரிசெய்ய ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்தார். சக தோழருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை போக்க முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் அமைச்சரை எப்படியாவது கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் இருந்த அமலாக்கத்துறையினர், ஒன்றிய அரசு மருத்துவர்களை இ.எஸ்.ஐ மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை செய்ய செய்தனர். அவர்களும் ஏற்கனவே உறுதிபடுத்தியதையே உறுதி செய்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதியும் நேரில் வந்து அமைச்சரின் உடல்நிலையை பார்த்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்று, எந்த மருத்துவமனையில் சேர்ப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கேள்வி : அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறலாமே
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்: "அமைச்சரின் துணைவியாரிடம் கேட்டோம், அவர் காவேரி மருத்துவமனையே நாங்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை என்பதால், அங்கேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது" என்றார்.
கேள்வி : நெஞ்சுவலி என்பது நாடகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது குறித்து
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்: "அது மனிதாபிமானம் அற்ற ஒரு சில மிருகத்தனமான நபர்கள் சொல்பவை.
காலையில் இருந்து உணவு கொடுக்காமல், சுமார் 15 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி உள்ளனர். மேலும் தன்னை கீழே தள்ளியதாகவும் அமைச்சர் சொன்னார். நல்வாய்ப்பாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அவருக்கு ஏற்பட்டுள்ள இதய பாதிப்புகள் குறித்து மருத்துவர் முறையாக பரிசோதனை செய்து உறுதிபடுத்தி உள்ளனர். கூடுதலாக சந்தேகம் ஏற்பட்டால், சந்தேகிக்கும் நபர்கள் அவர்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அமைச்சரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, நாடகம் என இப்படியாக பேசுவது சரியாக இருக்காது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்புகள் இருப்பதையும் சிகிச்சை பெற்று வந்ததையும் அவரது மனைவி உறுதிபடுத்தி உள்ளார். உப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துள்ளன. மேலும் அவரது தம்பி அசோக் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டண்ட் வைக்கப்படுள்ளது. அண்மைக் காலங்களாக குறைவான வயதினருக்கு தான் இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருவதை உலக சுகாதார அமைப்பே உறுதிபடுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார்.