பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஒரு கட்சியை அடகுவைத்து கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வரும் நபரான எடப்பாடி பழனிசாமி பேச்சை குறைப்பது அவருக்கு நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது முன்னுக்கு பின் முரணாக உளறிவிட்டு சென்றார். செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பாக கண்ணாடி முன் நின்று பார்த்து, இதை பேச தனக்கு அருகதை, யோக்கியதை இருக்கிறதா? என்பதை யோசித்திருக்க வேண்டும்.
ஊழல், முறைக்கேடு, கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தலை மீதும், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தலை மீதும் கத்தி தொங்கிக்கொண்டிருக்க அதை யோசித்து பார்க்காமல் பேசுவது வெட்கக்கெட்ட செயலாகும். போக்குவரத்து அமைச்சராக இருக்கும்போது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
உடனே முன்னுக்கு பின் முரணாக, "கடந்த இரண்டு ஆண்டுகளில் டெண்டர் விடாமல் மது பார்கள் செயல்படுகின்றன, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது" என்கிறார். அதிமுக ஆட்சி கால பழைய புகார் திரும்பப்பெறப்பட்ட நிலையிலும், அந்த வழக்கை பழிவாங்குவதற்காக பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தான் உண்மை நிலவரம். ஆனால், இந்த ஆட்சி மீது குற்றச்சாட்டு எதுவும் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை தற்போதைய ஆட்சி மீது களங்கம் கற்பிக்க பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த வழக்கிற்காக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பதை சொல்லிவிட்டு, பிறகு முன்னுக்கு பின் முரணாக வெட்கமில்லாமல் பேசுகிறார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு என்றார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
அதை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "அமைச்சர் அறையில் சோதனை நடத்திய தலைகுனிவு" என்றார். இரண்டு சோதனைக்கும் வித்தியாசம் இருப்பதை உணரும் அறிவு துளியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை அவரின் பேச்சு காட்டுகிறது.
2016ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த தருணத்தில் பாஜகவுக்கு அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையும் அது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக அமைச்சர் மீதான நடவடிக்கையும், அவரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதிர்க்கட்சி மீதான பழிவாங்கும் செயலாகும். 2016ஆம் ஆண்டு நடந்த தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தை விமர்சித்தார்.
முதலமைச்சராக இருக்கும் இந்த தருணத்திலும் பாஜகவின் பழிவாங்கும் செயலை கண்டிக்கிறார். 2016ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் சோதனை நடந்தபோது பாஜகவை கண்டித்து அப்போதைய முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமோ அல்லத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அடிமைகள் போல பதுங்கிக்கொள்ளாமல், "ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?" என்று நமது முதலமைச்சர் அவர்கள் கண்டித்துள்ளார்.
இப்போதுகூட "தலைமைச் செயலகத்துக்குள் சோதனையா?" என ஒன்றிய பாஜகவை அரசை கண்டிக்க எடப்பாடி பழனிசாமிக்கு துப்பு இல்லாதபோது, அவர் எப்படி மாநில உரிமையை காப்பார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்வார்கள். வரும் தேர்தல்களில் அதிமுக அடிமைகளுக்கு தமிழ்நாட்டு பாடம் கற்பிப்பார்கள். செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் அவரே பதவி விலக வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதை சொல்ல எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும். அரசின் டெண்டர்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கியதில் மட்டும் 4000 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. எல்.இ.டி விளக்குகள் வாங்கியதில் ஒரு விளக்கிற்கு 3900 ரூபாய் ஊழல் என கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழுந்து சோதனை நடந்தபோது தார்மீக அடிப்படையில் பதவி விலகவில்லை. பாஜக ஒன்றிய அரசு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை செய்தபோது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டெல்லிக்கு சென்று மோடி, அமித்ஷா கால்களில் விழுந்த எடப்பாடி பழனிசாமி, வெட்கமே இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதை தமிழ்நாடு அறியும். கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்ததால் ஜெயக்குமார் கைது செய்யப்படார் என பொய்யான தகவலை முதலமைச்சராக இருந்த ஒருவர் சொல்வது வெட்கக்கேடானது.
ஜெயக்குமார் தனது மகள், மருமகனுடன் சேர்ந்து நிலத்தையும், நிறுவனத்தையும் அபகரித்துக்கொண்டார் என்ற புகாரின் பேரிலேயே கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஒரு கட்சியை அடகுவைத்து கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வரும் நபரான எடப்பாடி பழனிசாமி பேச்சை குறைப்பது அவருக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.