அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 16 உறுப்பு கல்லூரிகள் உள்ளது. அதில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள துறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள பாடபிரிவுகளை நீக்கிவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிசியல், இன்டெலிஜென்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதற்கு ஆட்சி மன்ற குழுவிலும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், 11 கல்லூரிகளில்மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் தமிழ் வழியில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் இந்த கல்வியாண்டில் தற்காலிகமாக நீக்குவதற்கு அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் உட்பட எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், "சிவில், மெக்கானிக் பாட பிரிவுகளில் தமிழ் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் இல்லை. ஆங்கில பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் ஒற்றை இலக்க எண்ணிலே மாணவர்கள் வருகை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சிவில், மெக்கானிக் பிரிவில் சரிவர மாணவர்கள் சேர்க்கை இல்லை. ஆகையால் இந்த பாட பிரிவுகளை மட்டும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்திருந்தோம்.
உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு எவ்வித பாடப்பிரிவுகளையும் நீக்க மாட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை திரும்ப பெறுகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்வழிக்கல்வியில் வேலை வாய்ப்பு கிடைக்ககாது என்பது தவறானது. தமிழ் வழிக்கல்வியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் முற்றிலுமாக இல்லை என்றார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த கல்வி ஆண்டு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட படிப்புகளையும் தமிழ் வழியில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.