புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி 30% கமிஷன் பெறும் அரசாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் குற்றம்சாட்டு வைத்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சலீம், "புதுச்சேரிக்கு ரூ. 1200 கோடி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்று பொய்யான ஒரு தகவலை ஆளும் கட்சியினர் சொல்லி வருகின்றனர். ஏனெனில் ஜல்சக்திக்கு ரூ.28 கோடி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், புதுச்சேரி நகரில் குடிநீர் தரமற்ற நிலையில் உள்ளது.
தரமான குடிநீரை வழங்கமுடியாத நிலையில் ஜல்சக்தி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?. அதேபோல் புதுச்சேரியில் பொலிவுறு நகரத்திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.
மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது. மேலும் கோயில் நிலங்கள் முறையற்ற அளவில் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஜ.டி தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் பத்திரப்பதிவில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என தெரிகிறது.
அதேபோல் புதுச்சேரியில் எம்.எல்.ஏக்கள் மேம்பாட்டு நிதியில் போடும் சாலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. லஞ்சம் ஊழல் நடந்துள்ளதால் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், அரசு டெண்டர்களில் 30% கமிஷன் பெறும் அரசாகப் புதுச்சேரி அரசு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்து மாநிலத்தைக் காப்பாற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்கள் பரப்புரைக் கூட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.