ஆண்களும் பெண்களும் சேர்ந்து வசித்துவரும் இந்த உலகத்தில் பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை பல்வேறு பெண்களும் நிரூபித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கனரக ஓட்டுநர் பிரிவில் முத்திரையைப் பதித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஷர்மிளா.
24 வயது இளம்பெண்ணான ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார். ஆனால் தந்தையின் தொழிலான ஓட்டுநர் தொழிலில் ஈக்கப்பட்டு தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்டத்தொடங்கியவருக்கு அது பிடித்துவிட்டதால் அதில் அதீத ஈடுபாடு காட்டத்தொடங்கியுள்ளார்.
ஆட்டோ, கார் என ஓட்டுநர் தொழிலில் அடுத்தடுத்து கற்றுக்கொண்ட ஷர்மிளா கோவையின் முதல் பேருந்து ஓட்டுனராவதே தனது லட்சியம் என நினைத்து பேருந்து பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு முதலில் அவரை வினோதமாக பார்த்தவர்கள் பின்னர் அவரின் திறமையை பாராட்டத் தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் உரிமமும் பெற்று அசத்தியுள்ளார்.
கொரோனா காலத்தில் தந்தையின் ஆட்டோவை எடுத்து வேலைக்கு சென்றவர் தற்போதுவரை ஆட்டோ ஓட்டுநராக தனது முத்திரையை பதித்துள்ளார். ஆரம்பத்தில் நீ எல்லாம் இதுக்கு வருகிறாய், பேருந்து டயர் அளவு கூட இல்லை நீ பேருந்து ஓட்டப்போறியா என பல்வேறு வசவுச்சொற்களையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையை படைத்துள்ளார்.
"வெளியூர், தொலைதூர பேருந்துகளை ஓட்டுவதற்கு ஆசை இல்லை. நான் தினமும் வந்து செல்கிற காந்திபுரம் - மருதமலை வழித்தடத்தில் உள்ள பேருந்தை தான் ஓட்ட வேண்டும். அது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் என என் தந்தையை என்னை பற்றி பெருமையாக சொல்லவேண்டும்” என்பதே எனது ஆசை என்று கடந்த 2019-ம் ஆண்டு கூறியிருந்தார் ஷர்மிளா.
இவர் குறித்த தகவல் இணையத்தில் பரவிய நிலையில், இவருக்கு தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை ஊட்ட வாய்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை கூறிவருகின்றனர்.