23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.
அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை 5 முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.
இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.
அதன் உச்சமாக 1 லட்சம் ஏழைகளுக்கு 5 நட்சத்தர ஹோட்டலில் உணவளித்து பெரும் புகழ்பெற்றார். இவரை நிகழ்கால கர்ணன் என்றே சிலர் கொண்டாடுகின்றனர். இது தவிர தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏழைகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் உணவு வசதி செய்து தருவதாக உறுதியளித்து ஆச்சரியப்படவைத்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ஹர்ஷா சாய் தனது வீடியோக்களை மொழிமாற்றம் செய்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் தனது யூடியூப் பக்கத்தை தொடங்கி நடத்திவருகிறார். அவரின் இந்த மொழிமாற்ற வீடியோக்களுக்கு ட்ரான்ஸ்லேட்டர், டப்பிங் கலைஞர்கள் போன்ற பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஹர்ஷா சாயின் தமிழ் யூடியூப் சேனலுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கார்த்திக் என்பவர் பேட்டியளித்துள்ளார். அதில் ஹர்ஷா சாய் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதில், ஹர்ஷா சாயிடம் நான் இதுவரை பேசியதில்லை என்றும், அவரிடம் மட்டுமல்ல அவரின் டீமிடம் கூட பேசவில்லை என்றும் கூறியுள்ளார். யாரோ ஒருவர் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்டை கொடுத்தால் அதற்கு பின்னணி குரல் மட்டும் நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஸ்கிரிப்ட்டில் இருப்பதைதான் படிக்கலாமே தவிர நம்மளே ஏதும் பேசமுடியாது என்றும் கூறியுள்ளார். அதோடு வீடியோ தேவைக்காக வார்த்தையில் சில சொற்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.