தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளதாக இணையத்தில் தவறான செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து போக்குவரத்துத்துறை தெளிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேபோல் அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக அரசு பேருந்துகளை வாங்கும் திட்டம் குறித்து இங்குநாம் தெளிவாக பார்ப்போம்: - சென்னை மாநகரில் 500 தனியார் பேருந்துகளுக்கு அனுமதியளிக்க தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக, செய்தி வெளியானது முதலே பலரும் குய்யோ, முய்யோ என இணையத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டனர். முதலில் இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இது "உலக வங்கியின் திட்டம்" அல்ல.
இத்திட்டம் முழுக்க தனியார்மயம் "அரசுப்போக்குவரத்து கழகமும், தனியாரும் இணைந்து செயலாற்றும் சேவைத் திட்டம்". இது நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் தற்சமயம் நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி பேருந்தும், அதன் ஓட்டுநரும் தனியாரை சேர்ந்தவர்கள். ஆனால், பேருந்து பயணமாகும் வழித்தடமும், அதில் பயணச்சீட்டு வழங்கும் நடத்துனரும், வசூலாகும் பயணக் கட்டணமும் அரசினுடையது.
தற்போது நடைமுறையிலுள்ள மகளிர் இலவச பயணம், முதியோர் இலவச பயணம், பள்ளி மாணவர்கள் இலவச பயணம் மற்றும் மாதாந்திர சலுகை கட்டண பயணம் என இதுகாறும் அரசுப்பேருந்தில் நாம் பெறும் அனைத்து சலுகைகளும் இந்த புதிய திட்டத்திலும் கட்டாயம் உண்டு. மேலே சொன்னவை திட்டம் குறித்த புரிதலுக்காக.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது இயங்கி வருகிறது. அந்தப் பேருந்துகளும், அது இயங்கும் வழித்தடத்திலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. அது வழக்கம்போல இயங்கும். ஆகவே, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பும் இருக்க போவதில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து சேவையை இயக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. தற்போதைய சூழலில் சுமார் 1000 பேருந்துகள் கூடுதலாக இயக்க தேவை இருப்பதாக தெரிகிறது.
போக்குவரத்துத் துறையின் பொருளாதார சூழல் அனைவரும் நன்கு உணர்ந்ததே. நாளொன்றுக்கு ஏறக்குறைய 8 கோடி அளவிற்கு போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்து கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது.
அரசின் சார்பில் புதிதாக 1000 பேருந்துகள், அதுவும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டும், பல ஆயிரம் கோடி செலவழித்து வாங்குவதென்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று.
அரசைப் பொருத்தவரை மக்களுக்கு சேவை வழங்க வேண்டும். அதே சமயம் துறைக்கு நஷ்டமும் இருக்கக் கூடாது என்பதற்காக உலக வங்கியின் திட்டத்தை செயலாற்ற முனைப்பு காட்டுகிறது. அதாவது, "மக்களுக்கு தடையில்லா சேவை. போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருமானம்" என்பதுதான் அரசின் நோக்கமாக இருக்கக்கூடும். இது ஒருவிதத்தில் வரவேற்க கூடியதே. எந்தத் திட்டத்தையும் புரிதல் இல்லாது, எதிர்க்கும் கும்பல், இத்திட்டம் குறித்தும் எதிர்க்கத் தொடங்கி விட்டனர். அதை புறந்தள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியால் போக்குவரத்துத் துறை பாழ்பட்டு கிடப்பது அனைத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் நன்கறிந்ததே. அது இப்போது மெல்ல, மெல்ல மக்களுக்கு பலன் தரும் திட்டங்களால் வளர்ச்சி அடைவதும் அறிந்த ஒன்று.
இதே திட்டத்தை அம்மையார் காலத்தில் கொண்டு வந்திருந்தால் பலரும், இன்றைய சூழலில் தேவையான ஒன்று என புகழ்ந்திருப்பர். அவர்களுக்கு திட்டத்தின் பயன் முக்கியமல்ல. அதை திமுக அரசு கொண்டு வருவது தான் எதிர்ப்பின் நோக்கமாக இருக்கக்கூடும். கொஞ்சம் யோசியுங்கள்.
"அரசின் சார்பில் முதலீடு இல்லை". ஆனால், "மக்களுக்கு சேவையும் போக்குவரத்துத் துறைக்கு லாபமும் நிச்சயம்" எனும்போது இத்திட்டம் செயலாக்கம் பெறுவதில் தவறேதுமில்லை. தவிர, ஏற்கனவே இயங்கும் பேருந்துகளோடு கூடுதல் பேருந்துகளும் மக்களுக்காக இயங்குவதால் அவர்களும் நிம்மதியடைவர்.